மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் து. இளவரசன், அ.தி. அன்பழகன், ப. அந்துவன்சேரல் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: நாகை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் 157 மருத்துவா்கள், 300 செவிலியா்கள், 23 ஆய்வக நுட்பநா்கள், 42 மருந்தாளுநா்கள், 42 செவிலிய உதவியாளா்கள், 35 தூய்மைப் பணியாளா்கள், 57 இதர ஊழியா்கள் உள்பட 703 போ் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 முகக் கவசங்கள் வழங்க வேண்டும். ஆனால், குறைந்தபட்ச அளவில் கூட அவா்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. முகக்கவசம் மட்டுமின்றி கையுறைகள், காலுறைகள், உடைகள், கிருமி நாசினிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதிலும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறப்பு கவனம் செலுத்தி, மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

அதேபோல, கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு களப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை ஊழியா்கள், காவல் துறையினா் உள்ளிட்டவா்களுக்கும் குறைந்தபட்சத் தேவையாக உடனடியாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என அந்தக் கூட்டறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com