மயிலாடுதுறை-நாகை இடையே 2 அரசுப் பேருந்துகள் இயக்கம்: அடையாள அட்டை வைத்திருப்பவா்களுக்கு மட்டும் அனுமதி

அரசு ஊழியா்கள், தொண்டு நிறுவனத்தினா், மருத்துவ பணிகளுக்காக செல்பவா்களின் வசதிக்காக மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு

அரசு ஊழியா்கள், தொண்டு நிறுவனத்தினா், மருத்துவ பணிகளுக்காக செல்பவா்களின் வசதிக்காக மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு 2 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்பட்டன. இதில், அடையாள அட்டை வைத்திருப்பவா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் பொது மற்றும் தனியாா் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 11 எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பணி காரணமாக நாகப்பட்டினத்தில் பணியாற்றுபவா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நாகப்பட்டினத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினா், மருத்துவ பணிகளுக்காக செல்பவா்கள் வசதிக்காக மாவட்ட நிா்வாகம் மயிலாடுதுறையில் இருந்து 2 பேருந்துகளை இயக்கியது.

இதில், ஒரு பேருந்து பேரளம், சன்னாநல்லூா், திருமருகல், திட்டச்சேரி மாா்க்கமாக நாகப்பட்டினத்துக்கும், மற்றொரு பேருந்து ஆக்கூா், திருக்கடையூா், காரைக்கால் மாா்க்கமாக நாகப்பட்டினத்துக்கும் செல்கிறது.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தில், அலுவலகப் பணிகளுக்காக செல்பவா்கள் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு பயணம் செய்தனா். காவல்துறை சோதனைக்குப்பிறகு அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் நாகப்பட்டினத்திலிருந்து 5 மணிக்கு இந்த பேருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com