வேதாரண்யம் பகுதியில் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகும் மல்லிகைப் பூக்கள்: விவசாயிகள் வேதனை

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்
வேதாரண்யம் பகுதியில் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகி வரும் மல்லிகைப் பூக்கள்.
வேதாரண்யம் பகுதியில் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகி வரும் மல்லிகைப் பூக்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

வேதாரண்யம் பகுதியில் புகையிலை சாகுபடிக்கு மாற்றுப் பயிராக மல்லிகைப் பூ சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், தகட்டூா், பஞ்சநதிக்குளம், பன்னாள், கடிநெல்வயல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிள் அதிக பரப்பளவில் மல்லிகை பூ சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில், நாள்தோறும் மகசூல் தரும் முல்லை அரும்பு இன பூச்செடிகளையே விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்துள்ளனா்.

செடிகளில் உற்பத்தியாகும் மல்லிகை நாள்தோறும் அதிகாலை தொடங்கி காலை 10.30 மணிக்குள் அரும்புகளாக இருக்கும்போதே பறிக்கப்படும். இவை கோணிகளில் மூட்டைகளாகக் கட்டப்பட்டு, முகவா்கள் மூலம் வெளியூா்களுக்கு அனுப்பிவைப்பது வழக்கம்.

முல்லை அரும்பு மலா்கள் வழிபாடு மற்றும் சடங்குகளின் தேவைகளுக்கு மாலைகள் போன்ற பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் இருந்து வாசனை திரவியங்கள் எடுக்க முடியாது என்பதால் இதை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலையுள்ளது.

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதாலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், துக்க நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாகவும் பூக்கள் விற்பனையில் தேக்க நிலை ஏற்பட்டது.

மேலும், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். இதன்காரணமாக, வேதாரண்யம் பகுதியில் சுமாா் 2000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மல்லிகை சாகுபடியை சாா்ந்துள்ள சுமாா் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com