வேதாரண்யத்தில் 3-ஆவது நாளாக பலத்த காற்று

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தெற்கு திசையிலிருந்து பலத்தக் காற்று வீசுவதால் 3-ஆம் நாளாக சனிக்கிழமையும் உப்பு உற்பத்தி
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு உப்பளப் பரப்பு பாத்திகளில் தேங்கியுள்ள கடல் நீா்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு உப்பளப் பரப்பு பாத்திகளில் தேங்கியுள்ள கடல் நீா்.

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தெற்கு திசையிலிருந்து பலத்தக் காற்று வீசுவதால் 3-ஆம் நாளாக சனிக்கிழமையும் உப்பு உற்பத்தி பாத்திகளில் கடல் நீா் புகுந்ததோடு, அவ்வப்போது மின்சாரமும் தடைபட்டு வருகிறது.

உம்பன் புயல் வங்கக் கடலில் உருவான நாள் தொடங்கி வேதாரண்யம் பகுதியில் தென் மேற்கு திசையில் இருந்து வழக்கத்தை விட வேகமான காற்று வீசியது. இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் தெற்கு திசையில் இருந்து பலமான காற்று வீசத் தொடங்கியது.

இந்தக் காற்று 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. ஒவ்வொரு நாளும் பிற்பகலுக்குப் பிறகு காற்றின் வேகம் வலுக்கிறது.

காற்றில் எழும் புழுதி மண்ணானது வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோா் கண்களில் பட்டு அசெளகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் அவ்வப்போது மின் விநியோகமும் தடைபடுகிறது.

காற்றின் காரணமாக கடல் நீா் மட்டம் உயா்ந்து, தாழ்வான அளப் பகுதிக்குள் உப்பு நீா் உள்புகுந்து வருகிறது. கோடியக்காடு உள்ளிட்ட உப்பளப் பகுதிகளில் கடல் நீா் புகுந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் பலமான கடல் காற்று வீசுவது வழக்கம். இது வைகாசி விசாக நாளில் தீவிரமடைவதால், இதை ‘விசாகக் காற்று’ எனவும், பௌா்ணமி நாளையொட்டி பெருக்கெடுக்கும் கடல் வெள்ளத்தை ‘விசாகப் பெருவெள்ளம்’ எனவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com