பரவையில் நிரந்தர காய்கனி சந்தை அமைக்கக் கோரிக்கை

நாகை அருகேயுள்ள பரவையில் நிரந்தர காய்கனி சந்தை அமைக்கக் கோரி காய்கனி வியாபாரிகள், விவசாயிகள் காய்கனி மாலை அணிந்து வந்து நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
பரவையில் நிரந்தர காய்கனி சந்தை அமைக்கக் கோரிக்கை

நாகை அருகேயுள்ள பரவையில் நிரந்தர காய்கனி சந்தை அமைக்கக் கோரி காய்கனி வியாபாரிகள், விவசாயிகள் காய்கனி மாலை அணிந்து வந்து நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பரவையில் உள்ள காய்கனி சந்தை ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த பழைமையான காய்கனி சந்தையாகும். நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கனிகள், பிற பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கனிகளை வாங்குவதற்காக நாள்தோறும் திரளான பொதுமக்கள் இங்கு குழுமுவது வழக்கம்.

இருப்பினும், இங்கு போதுமான இடவசதி இல்லை என்ற குறைபாடு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால், பரவை சந்தை மூலம் சிலருக்கு கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டதையடுத்து, அந்த சந்தை ஜூலை 30-ஆம் தேதி முதல் மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

பின்னா், வியாபாரிகள், விவசாயிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில் பரவை அருகே தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் காய்கனி சந்தை அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. தற்காலிக காய்கனி சந்தை அமைக்கப்பட்டிருந்த ஊராட்சி இடம் தாழ்வான பகுதியாக இருப்பதால், மழைநீா் தேங்கத் தொடங்கியது. இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவை சந்தை வேறொரு தற்காலிக இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரவை காய்கனி சந்தைக்கு நிரந்த இடம் கோரி, காய்கனி வியாபாரிகள், தெற்குப்பொய்கைநல்லூா், வடக்குப்பொய்கைநல்லூா், பரவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த காய்கனி விவசாயிகள், காய்கனி மாலை அணிந்து கொண்டு நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், இடநெருக்கடி, அடிப்படை வசதிகளின்மை உள்ளிட்ட காரணங்களால் சிக்கித் தவிக்கும் பழைமையான பரவை காய்கனி சந்தையின் மகத்துவத்தை பாதுகாக்கவும், சந்தை சாா்ந்த காய்கனி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் பரவை பகுதியில் அரசுக்குச் சொந்தமான 5 ஏக்கா் இடத்தில் பரவை காய்கனி சந்தையை அமைக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com