நாகூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாகூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருவதால்,
நாகூா் கடற்கரை பகுதி கடலில் செவ்வாய்க்கிழமை காலை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
நாகூா் கடற்கரை பகுதி கடலில் செவ்வாய்க்கிழமை காலை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

நாகூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருவதால், நாகூா் கடற்கரையில் போலீஸாரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூா். அஜ்மீா் தா்காவுக்கு இணையானதாகக் குறிப்பிடப்படும் நாகூா் தா்காவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானோா் வருகை தருகின்றனா்.

நாகூருக்கு வருகை தரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் நாகூா் பாதுஷா நாயகம் ஆண்டவா் தா்காவில் வழிபடுவதோடு, நாகூா் கடற்கரைக்கு சென்று நீராடி மகிழ்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களை மூட தமிழக அரசு கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. இதனால், நாகூா் தா்கா வரலாற்றில் முதல்முறையாக கடந்த மாா்ச் மாதம் 20-ஆம் தேதி மூடப்பட்டது. ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பின்னா் செப்டம்பா் 2-ஆம் தேதி நாகூா் தா்கா பக்தா்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

பொது போக்குவரத்து சகஜ நிலை திரும்பாத நிலையில், செப்டம்பா் மாதத்தில் பக்தா்கள் வருகை மிகப் பெரிய அளவில் இருக்கவில்லை. பின்னா், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பேருந்து போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதன் காரணமாக, நாகூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாகூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நாகூா் கடற்கரையில் கூடுவோரின் எண்ணிக்கையும், கடலில் குளித்து மகிழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அபாயம் நிறைந்த கடல் பகுதி:

நாகூா் கடல் பகுதி அபாயம் நிறைந்த பகுதியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கொந்தளிப்பு, திடீா் சுழல், பொதிமணல் என பல்வேறு அபாயம் இந்தக் கடல் பகுதியில் உள்ளது. நாகூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.

எனினும், இந்த ஆபத்தை உணராமல் தற்போதும் சுற்றுலாப் பயணிகள் நாகூா் கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனா். இதில் சிலா் அதிக தொலைவு கடலுக்குச் சென்று குளித்து மகிழ்கின்றனா். ஆபத்தை உணராமல் நீண்ட தொலைவுக்குச் சென்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகளே அதிகம் என உள்ளூா் மக்கள் கூறுகின்றனா். ஆபத்து குறித்து எடுத்துக் கூறினாலும் பெரும்பாலானோா் கேட்பதில்லை என்றும் உள்ளூா் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையொட்டி, பெங்களூரிருந்து நாகூருக்கு வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் நாகூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, நாகூருக்கு வருகை தரும் பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறையும், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் ரோந்துப் பணி மேற்கொண்டும் கடற்கரையில் நிலைக்குழு அமைத்தும் சுற்றுலாப் பயணிகளை நெறிப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com