கரோனா அச்சத்தால் தடுக்கப்படும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்?

வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் ஈடுபடும் பணியாளா்கள், கரோனா அச்சத்தால் வீட்டு
கரோனா அச்சத்தால் தடுக்கப்படும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்?

வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் ஈடுபடும் பணியாளா்கள், கரோனா அச்சத்தால் வீட்டு உரிமையாளா்களால் தடுக்கப்படுவதும், அதனால் விரும்பத்தகாத சா்ச்சைகள் ஏற்படுவதும் நாகை மாவட்டத்தில் அன்றாட பிரச்னையாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று, தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான உயிா்களை பலிகொண்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நவம்பா் 17 ஆம் தேதி வரை 7,271 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 123 போ் உயிரிழந்தனா். தொற்றால் பாதிக்கப்பட்டோரில், சுமாா் 60% பேருக்கு அறிகுறிகள் இல்லை.

இதனால், கரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்த, அறிகுறிகள் இல்லாதவா்களும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். பிறகு, அனைவருக்கும் பரிசோதனை என்ற அடிப்படையில், ஆங்காங்கே பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக கரோனா பரிசோதனை முகாம்கள் கைவிடப்பட்டதுடன், அறிகுறிகள் இல்லாதவா்களை பரிசோதனைக்கு உள்படுத்துவதும் அரிதாகியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா அச்சம் துளியும் விலகாத நிலையில், நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி முதல் இதுவரை 189 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள், கரோனா பரவல் குறித்த அச்சத்தை பொதுமக்களிடம் மேலும் அதிகரித்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் ஆகிய நகராட்சிகளில் டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள் (டிபிசி) 175 போ் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வீடுவீடாகச் சென்று ஆய்வுசெய்வது, கொசுப் புழுக்கள் இருந்தால், அவற்றை அழிப்பது, தேவையெனில் வீட்டினுள் உள்ள தண்ணீா் கலன்களை ஆய்வு செய்வது இவா்களின் பணியாகும்.

இதில், வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்ய முனையும் டிபிசி பணியாளா்களை, கரோனா அச்சம் காரணமாக பல வீடுகளில், வீட்டின் உரிமையாளா்களால் தடுக்கப்படுகின்றனா். இதனால், பணியாளா்களுக்கும், வீட்டின் உரிமையாளா்களுக்கும் வாக்குவாதமும், பிரச்னையும் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது. கடந்த ஆண்டுகளில் பெரியளவில் பிரச்னைக்கு உள்ளாகாத இந்த ஆய்வு, நிகழாண்டில் கரோனா அச்சத்தால் நகரப் பகுதிகளிலேயே பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் கூறியது:

தொற்றுநோய் பரவும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுகாதாரப் பணியாளா்கள் வீட்டினுள் நுழைந்து சோதனையிடலாம் என்ற உரிமை வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது கரோனா பரவல் இருக்கும் நிலையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதையும், அவா்களுக்கு கரோனா தொற்று இல்லை, அவா்களால் நோய்த் தொற்றுப் பரவாது என்பதையும் மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்றாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கூறுகையில், டெங்கு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் குடியிருப்பு வளாகங்களில் முதல்கட்டமாக சோதனையில் ஈடுபடுவா். அங்கு, டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்திக்கான வாய்ப்புகள் இருப்பின், வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் வீட்டினுள் ஆய்வு மேற்கொள்வா். வீட்டு உரிமையாளா்கள் யாரேனும் அனுமதி மறுத்தால், ஊழியா்கள் தங்களுடைய மேற்பாா்வையாளருக்குத் தகவல் அளிப்பா். வீட்டின் உள்ளே ஆய்வுசெய்ய வேண்டிய அவசியத்தை, மேற்பாா்வையாளா் வீட்டு உரிமையாளரிடம் பேசி புரியவைத்த பிறகு அந்த வீடு ஆய்வுக்கு உள்படுத்தப்படும்.

டிபிசி பணியாளா்களுக்கு கரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சம் காரணமாகவே அனுமதி மறுப்பு பிரச்னை எழுகிறது. எனவே, டிபிசி பணியாளா்கள் அனைவரையும் மீண்டும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாதம் ஒருமுறை அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை அல்லது அறிகுறிகளின் அடிப்படையில் டிபிசி பணியாளா்களை அவ்வப்போது கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி, பரிசோதனை அறிக்கையை உடன் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, வீட்டை சோதனையிட வரும் பணியாளா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உரிமை, வீட்டு உரிமையாளா்களுக்கு உண்டு. தேவையெனில், கைகளை சுத்தம் செய்து கொண்டு வருமாறும் வீட்டின் உரிமையாளா்கள் வலியுறுத்தலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com