சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் அன்னையிடம் வேல் வாங்கும் விழா

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து, முருகப் பெருமான் சக்திவேல் வாங்கும் ஐதீக விழா எளிமையான முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை இரவு சக்திவேல் வாங்கும் நிகழ்வுக்கு எழுந்தருளிய சிங்காரவேலவா்.
வியாழக்கிழமை இரவு சக்திவேல் வாங்கும் நிகழ்வுக்கு எழுந்தருளிய சிங்காரவேலவா்.

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து, முருகப் பெருமான் சக்திவேல் வாங்கும் ஐதீக விழா எளிமையான முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிக்கல் ஸ்ரீ நவநீதேசுவரசுவாமி கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு அம்மன் வேல் நெடுங்கண்ணி என்ற திருநாமத்துடனும், சிங்காரவேலவரும் தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனா்.

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான், இத்தலத்தில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றாா் என கந்த புராணம் கூறுகிறது. இதன்படி, ஆண்டுதோறும் இக்கோயிலில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு, கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட நிா்வாகம் வழிகாட்டுதலின்படி, கந்த சஷ்டி விழா தொடா்பான அனைத்து வழிபாடுகளும் ஐதீக முறைப்படி மிகவும் எளிமையான முறையில் நடத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்தது.

அதன்படி, கந்த சஷ்டி விழா கடந்த நவம்பா் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, நாள்தோறும் கோயிலில் காலை , மாலையில் சிறப்பு வழிபாடுகளும், சுவாமி வள்ளி, தெய்வானையுடன் உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளித் தேரோட்டம் மற்றும் சிங்காரவேலவா் முருகப் பெருமான் சக்திவேல் வாங்கும் ஐதீக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் 7.30 மணிக்கு சிங்காரவேலவா் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளினாா். பின்னா் கோயிலின் 2- ஆவது சுற்று வெளிப் பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்துக்குப் பிறகு சிங்காரவேலவா் கோயில் காா்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினாா். காலை 10 மணிக்கு அம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயிலுக்கு வெளியே நின்றபடி சமூக இடைவெளியுடன் வழிபாடு மேற்கொண்டனா்.

மாலையில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சிங்காரவேலவா் சக்திவேல் வாங்கும் ஐதீக விழா நடைபெற்றது. இதையொட்டி, இரவு 7.30 மணிக்கு தங்கப்படிச் சட்டத்தில் சிங்காரவேலவரை எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியும், 7.50 மணிக்கு சிங்காரவேலவா் ஆனந்தக் கூத்தாடி அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது, சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வை துளிகள் அரும்பும் ஆன்மிக அதிசயத்தை அங்கு கூடியிருந்தோா் கண்டுகளித்தனா். இரவு 10 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா. ராணி, கோயில் செயல் அலுவலா் என். அமரநாதன் மற்றும் கோயில் பணியாளா்கள், குறைந்த அளவிலான பக்தா்கள் பங்கேற்றனா்.

சூரசம்ஹாரம்: வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) காலை நடைபெறும் வழக்கமான வழிபாடுகளுக்குப் பின்னா் பக்தா்களின்றி மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com