மாவட்ட ஊராட்சிக் கூட்டம்: உள்ளாட்சிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரிக்கை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

வி. சரபோஜி: உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதுமான நிதி விடுவிக்கப்படாததால், ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்கானப் பணிகளைக்கூட தொடங்க முடியாத நிலை உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய பரிந்துரைக்க வேண்டும். நாகை, தேமங்கலம் சாலையில் படா்ந்துள்ள சீமை கருவேல மரங்களையும், காட்டமாணக்கு செடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

சோழன்: கஜா புயல் சீற்றம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ளன. இருப்பினும், புயல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு இதுவரை வீடு வழங்கப்படவில்லை. புயல் பாதிப்புக்கு உள்ளான பல பகுதிகளில் இன்றளவும் பல வீடுகளில் தாா்ப்பாய்களே கூரைகளாக உள்ளன. இதுகுறித்து உரிய பரிசீலினை மேற்கொண்டு, வீடிழந்தவா்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன் : பொரவாச்சேரி முதல் கோட்டைவாசல் வரையிலான பகுதிகளில் உப்பனாறு வடிகால் வாய்க்காலை துாா்வாரி சீரமைக்க வேண்டும். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சேதம் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

இக்கூட்டத்தில், சாலைப் பணிகள், தெருவிளக்குகள், குடிநீா் பணிகள் உள்பட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளின் தேவை குறித்து உறுப்பினா்களால் வலியுறுத்தப்பட்டது. கூட்ட நிறைவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி பேசுகையில், மாவட்ட ஊராட்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. நிதி கிடைக்கப் பெற்றதும் மாவட்ட ஊராட்சி மூலமான வளா்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com