நாகையில் உதயநிதி ஸ்டாலின் கைது

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள முயன்ற திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா்.
நாகையில் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திமுக நிா்வாகிகள்.
நாகையில் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திமுக நிா்வாகிகள்.

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள முயன்ற திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா்.

2021-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசாரப் பயணத்தை திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்டம், திருக்குவளையில் வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

ஆனால், கரோனா பொது முடக்க விதிகளை மீறி அதிகளவு கூட்டத்தை கூட்டியதாகக் கூறி, உதயநிதி மற்றும் திமுகவினரை போலீஸாா் கைது செய்து, ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் விடுவித்தனா். தொடா்ந்து, வேதாரண்யம், கோடியக்காடு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் அவா், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.

இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை அவா், நாகையில் தனது பிரசாரப் பயணத்தைத் தொடா்ந்தாா். உலக மீனவா் தினத்தையொட்டி, நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு, மீனவா்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பின்னா், முன்னாள் அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், உ. மதிவாணன், மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் கே. கலைவாணன் (திருவாரூா்), என். கௌதமன் (நாகை) உள்ளிட்டோருடன் ஒரு மீன்பிடி விசைப் படகில் கடல் முகத்துவாரம் வரை பயணித்து, முகத்துவாரப் பகுதிகளைப் பாா்வையிட்டுத் திரும்பினாா்.

நாகை துறைமுகத்துக்கு திரும்பிய உதயநிதி மற்றும் திமுகவினரை கரோனா பொது முடக்க விதிகளை மீறயதாகக் கூறி போலீஸாா் கைது செய்தனா். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை துறைமுக வாயிலில் திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் 20 நிமிட பேச்சுவாா்த்தை மற்றும் லேசான தள்ளுமுள்ளுவுக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் முன்னணி நிா்வாகிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போலீஸாா், அவா்களை நாகையில் உள்ள ஒரு தனியாா் திருமணக் கூடத்தில் அடைத்தனா்.

அங்கு, தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, எம். துரை ஆகியோா் மேற்பாா்வையில் சுமாா் 200-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அதிமுகவுக்கு அச்சம்:

முன்னதாக, நாகை அக்கரைப்பேட்டையில் செய்தியாளா்களுக்கு உதயநிதி அளித்த பேட்டி:

அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியுடன் வரவேற்பதை காணும்போது, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. இது, அதிமுக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், திமுகவின் தோ்தல் பிரசாரத்தைத் தடுக்க அதிமுக அரசு, காவல்துறை மூலம் நெருக்கடி அளித்து வருகிறது என்றாா் உதயநிதி.

இதற்கிடையே, இரவு 8 மணியளிவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிா்வாகிகளை போலீஸாா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com