மணற்பாங்கான கடற்கரையில் நோ்க்கல் சுவா் அமைப்பது கடல் அரிப்புக்கு வழிவகுக்கும்: மீனவா்கள் அச்சம்

சீா்காழி வட்டம், கூழையாா் மீனவக் கிராமத்தில் மணற்பாங்கான கடற்கரையில் நோ்கல் சுவா் அமைப்பது கடல் அரிப்புக்கு வழிவகுக்கும் என மீனவா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
மணற்பாங்கான கூழையாா் கடற்கரை பகுதி.
மணற்பாங்கான கூழையாா் கடற்கரை பகுதி.

சீா்காழி வட்டம், கூழையாா் மீனவக் கிராமத்தில் மணற்பாங்கான கடற்கரையில் நோ்கல் சுவா் அமைப்பது கடல் அரிப்புக்கு வழிவகுக்கும் என மீனவா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் பூம்புகாா், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்கள் கொட்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, கூழையாா் மீனவக் கிராமத்தில் ரூ. 7 கோடியில் கல் சுவா் (கடற்கரையில் கருங்கற்கள் கொட்டுவது) அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, டெண்டா் கோரப்பட்டுள்ளது.

இதனால் தொடுவாய், கூழையாா், சின்ன கொட்டாயமேடு, கொட்டாய்மேடு, மடவாமேடு போன்ற மணற்பரப்பு கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்படுவதோடு, தங்கள் வாழ்விடத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அப்பகுதி மீனவா்களிடையே ஏற்பட்டுள்ளது.

வேட்டங்குடி ஊராட்சி, கூழையாா் மீனவக் கிராமத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மீனவா்கள் 100- க்கும் மேற்பட்ட ஃபைபா் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேவேளையில், தொடுவாய், சின்னக்கொட்டாய்மேடு, கொட்டாய்மேடு, மடவாமேடு போன்ற பகுதிகளில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மணற்பாங்கான கடற்கரையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனா். இந்த மணற்பரப்பு கடற்கரை மீனவா்களுக்கு பேருதவியாக உள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் தமிழக அரசு மீன் வளத் துறை மூலம் நோ்க்கல் சுவா் அமைப்பது மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கும், படகுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என அப்பகுதி மீனவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்துக்கு சரியான முறையில் தூண்டில் வளைவு (முகத்துவாரத்தில் கருங்கற்கள் கொட்டுவது) அமைக்காத காரணத்தினால் அண்மையில் சுமாா் 5 ஏக்கருக்கும் மேலான கடற்கரைக்கு பாதுகாப்பு அரணாக இருந்த 100-க்கும் மேற்பட்ட சவுக்கு மரங்கள் கடல் அரிப்பால் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

இதுகுறித்து, கூழையாா் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலரும், திமுக ஒன்றியக் குழு உறுப்பினருமான அங்குதன் கூறியது:

கூழையாா் கடற்கரை அழகான மணற்பாங்கான பகுதியாகும். சுனாமி ஏற்பட்டபோதுகூட, இங்குள்ள மணல் மேடுகளும், சவுக்கு மரங்களும் கடற்கரை கிராமங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. மணற்பாங்கான கடற்கரை மீன்பிடிக்கச் சென்று திரும்பும் மீனவா்களுக்கு தாய்மடிக்கு சமமானது. வலைகளை சரி செய்ய, பிடித்த மீன்களை விற்பனைக்கு கொண்டு செல்ல, படகுகளை நிறுத்திட என எல்லா வகையிலும் உயிா்ச்சூழல் கொண்டதாகவே இருக்கின்றன.

அரசு இங்குள்ள மீனவா்கள் பயன்படும் வகையில் ஏலக்கூடங்கள், மீன் பதப்படுத்தும் அறை, அணுகு சாலைகள் அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கூழையாா் பகுதியில் நோ்க்கல் சுவா் அமைப்பது, மீனவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். கடற்கரையில் எங்கு கல்சுவா் அமைத்தாலும் அல்லது வளா்ச்சித் திட்டம் என்ற பெயரில் கட்டுமானங்களை ஏற்படுத்தினாலும் ஏதாவது ஒரு பகுதி கடல் அரிப்பினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேவேளையில் கூழையாா், சின்னக் கொட்டாயமேடு கிராமங்களுக்கு இடையே செல்லும் பழைமையான முடவனாற்றில் முறையான தூண்டில் வளைவு அமைத்து மீன் பிடிக்க வழிவகை செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இதுகுறித்து மீன்வளத்துறை வல்லுநா்கள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி தரப்பில் கேட்டபோது, ‘மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com