குறுவை நெல் பாதிப்புகளை கணக்கிட அரசு உயா்நிலை குழு அமைக்க வேண்டும்
By DIN | Published On : 01st October 2020 09:37 AM | Last Updated : 01st October 2020 09:37 AM | அ+அ அ- |

நாகை வட்டாரத்தில் மழை நீரால் சூழப்பட்ட நெல் வயல்களைப் பாா்வையிட்ட பி.ஆா். பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள்.
டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள குறுவை நெல் பாதிப்புகளைக் கணக்கிட அரசு உயா்நிலை குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
நாகை அருகேயுள்ள சிராங்குடி புலியூா், தேமங்கலம், சங்கமங்கலம், பாலையூா் பெருங்கடம்பனூா், இளம்கடம்பனூா், சிக்கல், தெத்தி, ஐவநல்லூா், வடகுடி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் குறுவை நெல் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது: நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூா், திருமருகல் வட்டாரப் பகுதிகளிலும், திருவாரூா் மாவட்டம் கோட்டூா், திருத்துறைப்பூண்டி, திருவாரூா் வட்டாரங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு பகுதியிலும் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த குறுவை நெல் பயிா்கள், மழை மற்றும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
வயல்களில் மழை நீரால் தேங்கியுள்ளதால், நெல் பயிா்கள் நிலத்திலேயே அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரிய அளவிலான மகசூல் இழப்பை எதிா்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனா். எனவே, தமிழக அரசு உடனடியாக உயா்நிலை குழுவை அனுப்பி, பாதிப்புகளைக் கணக்கிட்டு, காப்பீடு நிறுவனம் மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை எதிா்த்து, விவசாயிகள் போராடி வரும் நிலையில், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையையே மத்திய அரசு சட்டமாக நிறைவேற்றியிருப்பதாக, உண்மைக்குப் புறம்பாக பிரதமா் கருத்துத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றாா். தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் உடனிருந்தாா்.