முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திருக்குவளை பகுதியில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
By DIN | Published On : 04th October 2020 10:46 PM | Last Updated : 04th October 2020 10:46 PM | அ+அ அ- |

திருக்குவளை பகுதியில் யூரியா இடப்படவேண்டிய நெற்பயிா்கள்.
திருக்குவளை பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 6,500 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாற்றுகள் வளரத் தொடங்கியுள்ளதால், யூரியா உரம் இடவேண்டியுள்ளது.
இந்நிலையில், கீழையூா், திருவாய்மூா், எட்டுக்குடி, சித்தாய்மூா், வாழக்கரை உள்ளிட்ட கிராமங்களில் யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் வழங்கப்படுவதாகவும், அதுவும் குறைவான அளவே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், உரிய பருவத்தில் நெற்பயிருக்கு யூரியா உரம் இட முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண் அலுவலக வட்டாரத்தில் கூறியது:
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது நிலவி வரும் உரத் தட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்துக்கு 1003 டன் ஐபிஎல் ரக உரம் இறக்குமதி செய்யவுள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் இப்பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் என்றனா்.