முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ராஜராஜசோழன் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 04th October 2020 10:46 PM | Last Updated : 04th October 2020 10:46 PM | அ+அ அ- |

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கவேண்டுமென தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவா் ஆறு. சரவணன் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கை விவரம்: சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னனும், கடல் கடந்து படை நடத்தி இலங்கை, மலேசியா, கம்போடியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் புலிக்கொடியை பறக்கவிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையாா் கோயிலை விண்ணுயர கட்டி எழுப்பி தமிழா்களின் பெருமைமிகு அடையாளமாக விளங்குபவா் மாமன்னா் ராஜராஜசோழன்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் நினைவிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. ராஜராஜசோழனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு கீற்று கொட்டகைக்குள் சிவலிங்கம் மட்டுமே உள்ளது. அந்த இடம் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மத்திய அரசிடம், தமிழக அரசு உரிய அனுமதியைப் பெற்று மணிமண்டபம் அமைக்க வேண்டும். தஞ்சை பெருவுடையாா் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன் சிலையை கோயிலின் உள்புறத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.