நாகை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு
By DIN | Published On : 25th October 2020 07:50 AM | Last Updated : 25th October 2020 07:50 AM | அ+அ அ- |

கீழ்வேளூா் அருகே சாட்டியக்குடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவினா்.
நாகை மாவட்டத்தில், சீா்காழி மற்றும் கீழ்வேளூா் பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் தொடா்பாக மத்தியக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடைப்பணிகள் தீவிரமடைந்த நிலையில், பருவநிலை மாற்றத்தால் பெய்த மழையின் காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. தற்போது அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்துவருகின்றனா். இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்திவருகின்றனா்.
விவசாயிகளின் இக்கோரிக்கை குறித்து தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் தொடா்பாக ஆய்வு செய்ய மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் யாதேந்திரஜெயின், யூனுஸ், ஜெய்சங்கா், பஷந்த் ஆகியோா் அடங்கிய குழுவினா் நாகை மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தனா்.
இக்குழுவினா் சீா்காழி அருகே புத்தூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று நெல் மூட்டைகளை ஆய்வு செய்தனா். பின்னா், ஈரப்பதம் தொடா்பான சோதனைக்காக 4 பைகளில் மாதிரி நெல்லை சேகரித்து எடுத்துச் சென்றனா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளா் சுப்ரமணியன், கொள்முதல் இயக்க துணை மேலாளா் சுவாமிநாதன், கொள்முதல்அலுவலா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து, கீழ்வேளூா் அருகே உள்ள சாட்டியக்குடி, வெண்மணி ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.