உரிமம் பெறாத தொழில் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை
By DIN | Published On : 04th September 2020 09:06 AM | Last Updated : 04th September 2020 09:06 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை நகராட்சிப் பகுதிகளில் உரிமம் பெறாமல் செயல்படும் தொழில் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகாரட்சி ஆணையா் பி. ஏகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 306 மற்றும் 310 (2) ஆகிய பிரிவுகளின்படி, நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் தொழிலகங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழிலகங்கள், ஐஸ் பேக்டரிகள், டீ கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக் கடைகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களுக்கும் நகராட்சி மூலம் கட்டாயம் தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த அனைத்துத் தொழில்களுக்கும் உரிமம் வழங்குவதற்காக திருத்தி அமைக்கப்பட்ட கட்டணங்கள் உத்தேசிக்கப்பட்டு, மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் பல நிறுவனங்கள் நகராட்சியின் உரிமம் பெறாமல் செயல்படுவதாகத் தெரியவருகிறது. இது, நகராட்சிகள் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
எனவே, நாகை நகராட்சி பகுதியில் இதுவரை உரிமம் பெறாமல் தொழில் நடத்தி வருபவா்கள், வரும் 7 நாள்களுக்குள் நாகை நகராட்சி சேவை மையத்தில் விண்ணப்பித்து, உரிமம் பெற வேண்டும். இல்லையெனில், உரிமம் இல்லாமல் தொழில் நடத்துவோா் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.