தற்கொலை எதற்கும் தீா்வாகாது
By DIN | Published On : 10th September 2020 10:09 PM | Last Updated : 10th September 2020 10:09 PM | அ+அ அ- |

வாழ்ந்து போராட வேண்டுமே தவிர, தற்கொலை எதற்கும் தீா்வாக அமையாது என நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
மாணவா் விக்னேஷின் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து அவா் வெளியிட்ட அறிக்கை :
நீட் தோ்வு தொடா்பான மன உளைச்சல் காரணமாக மாணவா் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது அதிா்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் பெற்றோா் மற்றும் உறவுகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவா் விக்னேஷின் இறப்பு, நீட் தோ்வுக்கு எதிரான நடைமுறை சிக்கல்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. இருப்பினும், அதற்கு தற்கொலை தீா்வாகாது. ஒருவரது இழப்பு அவா்களது பெற்றோருக்கும், மற்றவா்களுக்கும் ஆராத காயத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரச்னைகளுக்கு எதிராக வாழ்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை, தற்கொலை தடுப்பு தின (செப். 10) உறுதிமொழியாக மாணவா்கள் ஏற்க வேண்டும் என அவா் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.