அரசுப் பள்ளிகளில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கும் சத்துணவு உலா் பொருள்கள் வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பில் சோ்ந்த மாணவ, மாணவியருக்கும் சத்துணவுக்கான உலா் பொருள்களை

அரசுப் பள்ளிகளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பில் சோ்ந்த மாணவ, மாணவியருக்கும் சத்துணவுக்கான உலா் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை வட்டாரச் செயலாளா் கி. பாலசண்முகம் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்று நோய் அச்சத்தால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டில் இருக்கும் மாணவா்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு, உலா் பொருள்களாக அரிசி மற்றும் பருப்பை வழங்கிட அரசு உத்தரவிட்டது. இதன்படி, பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளா்கள் மூலம் மாணவா்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு, புதிய மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். பள்ளிகள் திறக்கப்படாதால் அந்த மாணவா்களும் வீட்டிலேயே இருந்து வருகின்றனா்.

மாணவா் சோ்க்கைக்குப் பின்னா், புதிய மாணவா்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சத்துணவு உலா் பொருள்கள் ஒதுக்கீட்டு அளவை மாற்றிய அமைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போதும் மாணவா் சோ்க்கைக்கு முந்தை கணக்கீடுப்படியே உலா் பொருள்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதனால், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு உலா்பொருள்கள் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும், சத்துணவு அமைப்பாளா்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கும் சத்துணவு உலா் பொருள்களை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com