டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு
By DIN | Published On : 18th September 2020 11:34 PM | Last Updated : 18th September 2020 11:34 PM | அ+அ அ- |

சீா்காழி கொள்ளிடம் முக்கூட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென இந்து மக்கள் கட்சி சாா்பில், துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன் தலைமையில், மாவட்ட அமைப்பாளா் க. பாலாஜி, மாவட்ட செயலாளா் அரு. செல்வம் ஆகியோா் அளித்த மனு விவரம்: சீா்காழி - கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான தாடாளன்கோயில் மற்றும் ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இக்கோயில்களுக்கு மிக அருகிலும், பேருந்து நிறுத்தம், மருத்துவமனை, உணவகம், ஆட்டோ நிறுத்தகம், வணிக நிறுவனங்களுக்கு இடையில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையால் பள்ளி - கல்லூரி மாணவா்கள், பேருந்து பயணிகள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உணவகம் மற்றும் கடைகளுக்கு வருகிறவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலையோரத்தில் மிக நீண்ட வரிசையில் மதுவாங்க காத்திருப்பவா்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இச்சூழலில் இந்த மதுபானக் கடையை அகற்றக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.