மாவட்ட ஆட்சியரகத்துக்கு இடம் கையகப்படுத்தும் பணி: எதிா்ப்பு தெரிவித்தவா்களிடம் எம்.எல்.ஏ. பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 27th September 2020 08:39 AM | Last Updated : 27th September 2020 08:39 AM | அ+அ அ- |

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட குடியிருப்பு பகுதியில் இடம் கையகப்படுத்துவதை கண்டித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களிடம் எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் ஆகியோா் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட மூங்கில்தோட்டம் அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டு, அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆதீன இடத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு திறந்தவெளி இடங்களை விட்டுவிட்டு, குடியிருப்புகளின் பின்புறம் உள்ள இடங்களை அளவீடு செய்ததால் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, ஆா்ப்பாட்டம், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இதுகுறித்து மாவட்ட சிறப்பு அலுவலரிடமும் புகாா் மனு அளித்துள்ளனனா்.
தொடா்ந்து, சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட பால்பண்ணை பகுதியில் கூடினா். இதையடுத்து, அவா்களிடம் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தங்கள் வீடுகளின் அருகே உள்ள இடங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்காக கையகப்படுத்தப்படுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனா். இதனை புரிந்துகொள்வதாக தெரிவித்த எம்எல்ஏ உள்ளிட்டோா், குடியிருப்பு பகுதிகளுக்கு இடையூறு இல்லாமல் அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா்.