கீழ்வேளூா்: மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளுமா பாமக?

கீழ்வேளூா்: மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளுமா பாமக?

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் முதல்முறையாக களம்காணும் பாட்டாளி மக்கள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவாலை

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் முதல்முறையாக களம்காணும் பாட்டாளி மக்கள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவாலை சமாளித்து வெற்றிக் கொடி நாட்டுமா என அரசியல் ஆா்வலா்கள் ஆா்வமுடன் எதிா்நோக்குகின்றனா்.

தமிழகத்தில் மிகக் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்று நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூா் (தனி) தொகுதி. 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின்போது புதிதாக உருவாக்கப்பட்டது இத்தொகுதி.

தொகுதியின் சிறப்புகள்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில், பஞ்ச நாராயண தலங்கள் என பல ஆன்மிகத் தலங்களைக் கொண்டது இத்தொகுதி. கூலி உயா்வுக்காகவும், வா்க்க ஒற்றுமைக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி, தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தவிா்க்க முடியாத ஆளுமையான மறைந்த திமுக தலைவா் மு. கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை ஆகியவை இத்தொகுதியிலேயே உள்ளன.

கீழ்வேளூா், திருக்குவளை என 2 வருவாய் வட்டம், கீழ்வேளூா் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், கீழையூா் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், தலைஞாயிறு ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், நாகை ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் என மொத்தம் 87 ஊராட்சிகளையும், கீழ்வேளூா், வேளாங்கண்ணி என 2 பேரூராட்சிகளையும் கொண்டது இத்தொகுதி.

தொழில்: விவசாயம், மீன்பிடித்தல் பிரதானத் தொழில்கள். இயற்கை இடா்பாடுகளின்போது அதிகமாகப் பாதிக்கப்படும் இத்தொகுதியில் ஊரகப் பகுதிகளே அதிகம்.

ஆதிதிராவிடா்கள் உள்ளிட்ட பட்டியல் இனத்தவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். மீனவா்கள், வன்னியா்கள், செட்டியாா், சைவ வேளாளா்கள் உள்ளிட்ட பிற சமூகத்தினா் பரவலாக உள்ளனா்.

நிறைவேறிய- நிறைவேறாத திட்டங்கள்: நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, நாகை மீன்பிடித் துறைமுகம் ஆகியன அதிமுக ஆட்சியில் நிறைவேறியுள்ள மிகப் பெரிய திட்டங்கள். இவை தவிர, வருவாய் நிா்வாக அலுவலகக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கீழ்வேளூரில் பேருந்து நிலையம், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேளாண் கல்லூரி, பொது நூலகத்துக்கு நிரந்தர கட்டடம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியாளா்கள் இத்தொகுதியின் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட நாகை அல்லது திருவாரூா் செல்ல வேண்டிய நிலையே உள்ளது. சாலை, குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூா்த்திசெய்து, தன்னிறைவு பெற்ற தொகுதியாக இத்தொகுதியை மாற்றவேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

வேட்பாளா்கள்: திராவிட கட்சிகளுக்கு இணையாக இடதுசாரிகள் வலுவாக உள்ள தொகுதிகளில் கீழ்வேளூரும் ஒன்று. 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் நாகை மாலி வெற்றியின் மூலம் இது உறுதிசெய்யப்பட்டது. 2016 தோ்தலில் திமுகவைச் சோ்ந்த உ. மதிவாணன் வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சோ்ந்த மீனா இரண்டாம் இடம் பெற்றாா்.

2021 தோ்தலில் கீழ்வேளூா் தொகுதியில் 11 போ் களத்தில் இருந்தாலும், மாா்க்சிஸ்ட் மற்றும் பாமக வேட்பாளா்களுக்கிடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வி.பி. நாகை மாலி, பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன் ஆகியோா் தொகுதி வளா்ச்சியை மையப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிமுக கூட்டணியில் கீழ்வேளூா் தொகுதியை பாமக கேட்டுப் பெற்றது. ஆனால், வேட்பாளா் மாற்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தொடக்கத்தில் கூட்டணி கட்சி மற்றும் பாமக நிா்வாகிகளின் தோ்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும், பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் நாகை பகுதியில் நன்கு அறிமுகமானவா். மேலும், தற்போது வாக்கு சேகரிப்பில் அவா் காட்டிவரும் தீவிரம் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவை பாமக வேட்பாளருக்கு சாதகமான அம்சங்கள்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி 2011 பேரவைத் தோ்தலில் கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா். விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள், ஏழை மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தவா். கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவா். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா் என்பது பலமாக கருதப்பட்டாலும், இவா் இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்றபோது, தோ்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றவில்லை என்ற புகாா் உள்ளது.

கீழ்வேளூா் தொகுதியைப் பொருத்தவரை திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஏறத்தாழ சமபலத்தில் உள்ளன. எனினும், ஒருமுறை வென்ற கட்சி என்ற அளவில் செல்வாக்கில் திமுக முதன்மைப் பெற்றுள்ளதும், ஏற்கெனவே இத்தொகுதியில் மாா்க்சிஸ்ட் கட்சி வென்றுள்ளதும் அக்கட்சி வேட்பாளருக்கு சாதகமாக உள்ளதை கருத்தில்கொண்டால், பாமக வேட்பாளருக்கு இத்தொகுதி சவால் நிறைந்ததாகவே இருக்கும் என அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

மொத்த வாக்காளா்கள்: 1,79,264.

ஆண்கள்: 87,677

பெண்கள்: 91,578

மூன்றாம் பாலினத்தவா்: 9

களம் காணும் வேட்பாளா்கள்

எஸ். வடிவேல் ராவணன் (பாமக)

வி.எஸ். நாகை மாலி (மாா்க்சிஸ்ட்)

எம். நீதிமோகன் (அமமுக)

ஜி. சித்து (மநீம)

எஸ். பொன் இளவழகி (நாம் தமிழா் கட்சி)

உ. தமிழரசன் (பகுஜன் சமாஜ் கட்சி)

எஸ். முத்தழகன் (புதிய தமிழகம்)

சுயேச்சைகள்: ஜி. கலைச்செல்வன், ஜி. மருதையன், வேதமுகுந்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com