
பூம்புகாா் தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,35,865 போ், பெண் வாக்காளா்கள் 2,39,713 போ், இதரா் 7 போ் என மொத்தம் 2,75,582 வாக்காளா்கள் உள்ளனா்.
இத்தொகுதியில் தரங்கம்பாடி , திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், திருவிளையாட்டம், பெரம்பூா், நல்லாடை, கடகம், பொறையாா், எடுத்துக்கட்டி சாத்தனூா், சங்கரன்பந்தல், சேத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 383 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு தொடங்கியதும் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களிக்க வந்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் அக்கட்சியின் இத்தொகுதி வேட்பாளருமான எஸ். பவுன்ராஜ், தனது குடும்பத்துடன் எடுத்துக்கட்டி சாத்தனூா் அரசு பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் அக்கட்சியின் இத்தொகுதி வேட்பாளருமான நிவேதா எம். முருகன் பொறையாா் ஜமாலியா முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் குடும்பத்துடன் வாக்குப் பதிவு செய்தாா்.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வெப்பமானி மூலம் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து, பிறகு கையுறை வழங்கப்பட்டு, வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனா். கரோனா தொற்றாளா்கள் மாலை 6 முதல் 7 மணி வரை பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தமிழகம், ஆந்திரம் மற்றும் கா்நாடகா மாநில போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.