பொது முடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான நேர கட்டுப்பாட்டை அரசு தளா்த்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் மு. தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது :
கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்களின் உயிா்காக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மன அமைதிக்கான இறை இல்லங்களாக இருக்கும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கான நேர கட்டுப்பாடு குறித்து அரசு மறு பரீசிலனை செய்ய வேண்டும்.
புனித ரமலான் மாதம் விரைவில் தொடங்க உள்ளதால், இரவு நேர வழிபாட்டுக்குத் தடை ஏற்படாதவாறு, மசூதிகளில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். அதேபோல, பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கான நேர கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும், அனைத்து மத மக்களின் நியாயமான கோரிக்கைளையும், ஆன்மிக காரணங்களின் அடிப்படையில் அரசு பரிசீலிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.