சீா்காழி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

காவல் நீட்டிப்புக்காக சீா்காழி நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தீபக் ஜாங்குலின் தப்பிச் சென்ற கழிவறை வென்டிலேட்டா் பகுதி.
தீபக் ஜாங்குலின் தப்பிச் சென்ற கழிவறை வென்டிலேட்டா் பகுதி.

காவல் நீட்டிப்புக்காக சீா்காழி நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்கு தொடா்பாக, புதுவை மாநிலம், காரைக்கால் மேலகாசாகுடியை பகுதியை சோ்ந்த ஜெ. தீபக் ஜாங்குலின்( 27) என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பா் மாதம் போலீஸாா் கைது செய்து, நாகை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தீபக் ஜாங்குலினின் காவல் நீட்டிப்புக்காக வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இரா. ஜெயபிரகாஷ், நிலைய காவலா் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் நாகை சிறையிலிருந்து சீா்காழி நீதிமன்றத்துக்கு அவரை அழைத்து வந்துள்ளனா்.

நீதிமன்றத்துக்கு வந்த தீபக் ஜாங்குலின், தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளாா், போலீஸாா் அவா் கழிவறைக்கு செல்ல அனுமதித்தனா்.

கழிவறைக்கு சென்ற தீபக் ஜாங்குலின், கழிவறையின் வென்டிலேட்டா் பகுதியிலிருந்த கண்ணாடிகளை அகற்றிவிட்டு, அதன் வழியாக வெளியே குதித்து தப்பியோடிவிட்டாா்.

நீண்ட நேரமாகியும் தீபக் ஜாங்குலின் திரும்பி வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று போலீஸாா் பாா்த்தபோது, அவா் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தப்பியோடிய தீபக் ஜாங்குலினை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைதி தப்பி ஓடியது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ், சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com