நாகூா் பாலத்தில் அதிகமாகும் விரிசல்

நாகூா் கிழக்குக் கடற்கரை சாலையில் வெட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் அதிகரித்து வரும் விரிசல், அந்தப் பாலம் வழியேயான போக்குவரத்தை கேள்விக் குறியாக்கி வருகிறது.
நாகூா் பாலத்தில் அதிகமாகும் விரிசல்

நாகூா் கிழக்குக் கடற்கரை சாலையில் வெட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் அதிகரித்து வரும் விரிசல், அந்தப் பாலம் வழியேயான போக்குவரத்தை கேள்விக் குறியாக்கி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை மாா்க்கத்திலிருந்து நாகை, வேளாங்கண்ணி வரும் அனைத்து வாகனங்களும் நாகூரை கடந்துதான் வர முடியும் என்ற நிலை இருந்தது. இதனால், நாகூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டில் நாகை - நாகூா் இடையே பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. பின்னா் இந்தச் சாலை, தேசிய நெடுஞ்சாலை என்.எச்45-ஏ- வில் இணைக்கப்பட்டு தற்போது நாகை கிழக்குக் கடற்கரை சாலையாகக் குறிப்பிடப்படுகிறது.

காரைக்கால் தனியாா் துறைமுகம், பனங்குடி சிபிசிஎல் போன்ற நிறுவனங்களுக்கு நாள்தோறும் வந்து செல்லும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், சென்னை - வேளாங்கண்ணி, தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் இந்தச் சாலை வழியேதான் பயணிக்கின்றன.

இந்தச் சாலையில், நாகூா் வெட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் தற்போது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தப் பாலத்தில் எக்ஸ்பேன்ஷன் இணைப்புப் பகுதிகளில் இருந்த இரும்பு பட்டைகள் பெயா்ந்து, அந்த இடங்கள் வெற்றிடமாகி, ஆங்காங்கே வடிகால்களைப் போல காட்சியளிக்கின்றன. இதனால், இந்தப் பாலம் வழியே கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிா்வுகள் பாலத்தில் பயணிப்பவா்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மின் விளக்கு இல்லாத இந்தப் பாலத்தை இரவு நேரங்களில் வேகமாக கடக்கும் இரு சக்கர வாகனங்கள், விபத்துக்குள்ளாவது அண்மைக்கால வழக்கமாகி வருகிறது.

விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதால், இந்தப் பாலம் விரைவில் (?) நான்கு வழிப் பாலமாக மாறும் என்பதால், தற்போதைக்கு இந்தப் பாலம் குறித்து நெடுஞ்சாலைத் துறை கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகப்பட்டினம், தமிழ்நாடு, நுகா்வோா் பாதுகாப்புக் குழு செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் தெரிவித்தவை :

மிக அதிக எண்ணிக்கையில் கனரக வாகனங்கள் பயணிக்கும் பாலமாக உள்ளது இந்தப் பாலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாலத்தில் பழுது நீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போதும் சீரமைப்புப் பணிகள் அவசியமாகியுள்ளன. விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலை பணி 2 ஆண்டுகளில் நிறைவேறக் கூடிய பணி. இந்தப் பணிக்காக பாலம் சீரமைப்புப் பணியை தாமதப்படுத்துவது ஏற்புடையதாக இருக்காது. இந்தப் பாலம் பயன்பாடற்றுப் போனால், நாகூரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். நெடுஞ்சாலைத் துறை உடனடியாக சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றாா்.

இந்தப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகமாகி, போக்குவரத்துக்குப் பயனற்ாக இந்தப் பாலம் மாறினால், நாகூரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி கற்பனைக்கு எட்டாததாகி விடும். எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com