காதணி விழாவுக்கு முறையாக அழைக்காததால் பெண் தற்கொலை
By DIN | Published On : 12th April 2021 08:04 AM | Last Updated : 12th April 2021 08:04 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சகோதரா் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவுக்கு, முறையான அழைப்பு விடுக்கப்படாததால் மன வேதனையடைந்த பெண், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
அண்ணாப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராசு மனைவி ஜெயலெட்சுமி (52). வெளியூரில் வசித்து வரும் ஜெயலெட்சுமியின் மூத்த சகோதரா் வீட்டில், அவரது பிள்ளைகளுக்கு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டவாறு காதணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஜெயலெட்சுமிக்கு நேரில் அழைப்பு விடுக்காமல், அஞ்சலில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். மேலும், அதில் உறவினா் என்ற முறையில் ஜெயலெட்சுமியின் குடும்பத்தினா் பெயரும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், வருத்தமடைந்த ஜெயலெட்சுமி, காதணி விழா நாளான ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு பின் பக்கமுள்ள முந்திரி மரத் தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.