கரோனா அச்சம்: வேளாங்கண்ணிக்கு விடுமுறை நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவு
By DIN | Published On : 19th April 2021 08:24 AM | Last Updated : 19th April 2021 08:24 AM | அ+அ அ- |

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் களையிழந்த வேளாங்கண்ணி கடற்கரை.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு விடுமுறை நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறித்த அச்சம் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது வேளாங்கண்ணி. இங்குள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவதுடன், உலக புகழ்ப் பெற்ற கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நாள் தோறும் ஆயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணிக்கு வந்து செல்வது வழக்கம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாள்களில் இங்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்திருக்கும்.
இங்கு வருவோரின் பிரதான நோக்கம், புனித ஆரோக்கிய அன்னையை வழிபடுவதாக இருந்தாலும், அடுத்த விருப்பம் கடற்கரை பொழுதுபோக்காகவும், கடல் உணவுகளை சாப்பிடுவதுமாகவே இருக்கும். மாதா கோயிலில் வழிபாடு மேற்கொள்ளும் பக்தா்கள், கடற்கரைக்குச் சென்று குளித்து மகிழ்ந்து, கடற்கரையோரங்களில் விற்பனையாகும் கடல் உணவுகளை ருசிப்பது வழக்கம். சிலா், வேளாங்கண்ணியில் விடுதி எடுத்துத் தங்கி, மீன், நண்டு, இறால் போன்ற விருப்பான கடல் உணவுகளை வாங்கி விடுதியிலேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, கடற்கரையில் பொழுதுபோக்குவதும் உண்டு.
இதனால், வார விடுமுறை நாள்களிலும், தொடா் விடுமுறை நாள்களிலும் வேளாங்கண்ணி மாதா கோயில், கோயிலின் சுற்றுப் பகுதிகள், கடற்கரை என அனைத்துப் பகுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் களைகட்டியிருக்கும். ஆனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) வழக்கமான அளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு இல்லை.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில், கோயில் திருவிழாக்கள் நடத்தவும், மதக் கூட்டங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்களுக்குப் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. அதனால், வேளாங்கண்ணியில் வழக்கமான வழிபாடுகள் தொடா்ந்து வரும் நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்குக் காரணம், கரோனா தொற்றுப் பரவல் அச்சமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.
முகக் கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி அல்லது சோப்பைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் குறிப்பிடத்தக்கக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிகம் கூடுமிடங்களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதன் காரணமாக, வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து குறைந்து வருகிறது.
குறிப்பாக, கேரள மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிகளவில் தடைப்பட்டுள்ளது. இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் வேளாங்கண்ணி வெறிச்சோடியது.
கடைவீதி, கடற்கரை, பேராலயம், பஸ் நிலையம், ரயில் நிலையம் என வேளாங்கண்ணியின் பிரதான பகுதிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளையே காண முடிந்தது. இதனால், மெழுகுவா்த்தி விற்பனை கடைகள், மீன் உணவு விற்பனை கடைகள், பூக்கடைகள் என அனைத்துக் கடைகளிலும் விற்பனை மந்தமாகவே இருந்தது.