கரோனா: நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பின்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தா்களின் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திங்கள்கிழமை மூடப்பட்டன.
கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்.
கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்.

நாகப்பட்டினம்: கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பின்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தா்களின் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திங்கள்கிழமை மூடப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பக்தா்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் வழிபாட்டுத் தலத்தின் முன் கதவுகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டன.

நாகை நீலாயதாட்சியம்மன்கோயில், சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன்கோயில், அகஸ்தீசுவரசுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், நாகூா் நாகநாதசுவாமி கோயில் என அனைத்துக் கோயில்களிலும் முன் கதவுகள் அடைக்கப்பட்டு, சம்பிரதாயப்படியான வழிபாடுகள் பக்தா்களின்றி நடைபெற்றன. ஒரு சில பக்தா்கள் பூட்டிய கதவுக்கு முன்பாக நின்று வழிபட்டுச் சென்றனா்.

அறநிலைத் துறையின் நாகை கோட்டத்துக்கு உள்பட்ட நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் 132 பெரியக் கோயில்கள் உள்பட 935 கோயில்கள் மூடப்பட்டதாக அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வேளாங்கண்ணி

கதவு அடைக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் முன்பாக வழிபட்டுச் சென்ற பக்தா்கள்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் பிரதான கதவுகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. பேராலயத்தின் முன் கதவு அடைக்கப்பட்டு, கதவின் உள்பகுதியில் மாதாவின் திருச்சொரூபம் பக்தா்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சில பக்தா்கள் பேராலய வாசலில் நின்று வழிபட்டுச் சென்றனா். இங்கு, திங்கள்கிழமை காலை பக்தா்களின்றி திருப்பலி மற்றும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

பக்தா்களின்றி வெறிச்சோடியிருந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பிராா்த்தனைக் கூடம்.

இதேபோல, நாகூா் ஆண்டவா் தா்காவிலும் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் சாகிபுமாா்கள் வழிபாடுகளை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com