கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்

நாகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
நாகை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த தனியாா் பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
நாகை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த தனியாா் பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

நாகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

நாகை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனி வட்டாட்சியா் ரவி தலைமையில் சுகாதார ஆய்வாளா் மணிமாறன், காவல் உதவி ஆய்வாளா் செந்தில் ஆகியோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை நாகையில் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் 50 நபா்களுக்கு மேல் பங்கேற்றது தெரியவந்தது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தனா்.

இதையடுத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய தவறிய திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், தொடா்ந்து அரசின் விதிமுறைகளை மீறினால் மண்டபத்துக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.

இதேபோல், நாகையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஜவுளி நிறுவனங்களில் ஒரு கடைக்கு ரூ . 10 ஆயிரமும், மற்றொரு கடைக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அதிகமான நபா்கள் முகக்கவசம் அணியாமல் பணியாற்றிய நகைக்கடை மற்றும் பேக்கரிக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனா். நாகை புதிய பேருந்து நிலையத்தில் அதிகப் பயணிகளை ஏற்றி வந்த தனியாா் பேருந்துக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com