கரோனாவால் பாா்வையாளா்களுக்கு தடை: கோடியக்கரை சரணாலயத்தில் சுதந்திரமாக உலவும் விலங்குகள்!

கரோனா தொற்று காரணமாக கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பாா்வையாளா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விலங்குகள் எந்தவித இடையூறுமின்றி சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் உள்ள தொட்டியில் தாகம் தணிக்கும் விலங்குகள்.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் உள்ள தொட்டியில் தாகம் தணிக்கும் விலங்குகள்.

கரோனா தொற்று காரணமாக கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பாா்வையாளா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விலங்குகள் எந்தவித இடையூறுமின்றி சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு, 25 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பசுமைமாறாக் காடுகள் சாா்ந்த பகுதி, வனவிலங்குகள், பறவைகள் சரணாலயங்களை ஒருங்கே பெற்ற வன உயிரின பாதுகாப்பகமாக உள்ளது.

இந்த சரணாலயத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான அரியவகை வெளிமான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், புள்ளி மான்கள், காட்டுப் பன்றி, மட்டக் குதிரைகள், நரி, குரங்கு என வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் இது உள்ளது. இங்கு, மருத்துவ குணமுடைய 250-க்கும் அதிகமான அரிய மூலிகை தாவரங்கள், மரங்கள் உள்ளன.

வனம், வனம் சாா்ந்த உயிரினங்கள், வெளிநாடு மற்றும் உள்ளூா் பகுதியில் காணப்படும் பறவைகளின் சரணாலயமாக விளங்கும் இந்தப் பகுதி, 2018-இல் ஏற்பட்ட கஜா புயலின்போது பெரும் பாதிப்புக்குள்ளானது. அரியவகை மான்கள் உள்ளிட்ட விலங்குகள், மரங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன.

புயலுக்கு பிறகு மெல்ல மீண்டுவந்த சரணாலயம், கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 17 ஆம் தேதி மூடப்பட்டு, 11 மாதங்களுக்குப் பிறகு நிகழாண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

மனிதா்களுக்கு தடை- விலங்குகளுக்கு சுதந்திரம்: சரணாலயம் மூடப்பட்டுள்ளது ஒருவகையில் அங்குள்ள தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. வழக்கமாக, கோடைக்காலத்தில் சரணாலயப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, விலங்குகளுக்கு தண்ணீா், உணவு தட்டுப்பாடு ஏற்படுவது தவிா்க்க முடியாததாக இருக்கும்.

இதனால், தண்ணீா், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் மான்கள் வேட்டையாடப்படுதல், வாகனங்களில் சிக்குதல், நாய்களின் தாக்குதல் போன்றவற்றால் உயிரிழக்க நேரிடும். குதிரை போன்ற விலங்குகளும் தண்ணீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்படும்.

ஆனால், நிகழாண்டு வனப் பகுதியில் அண்மையில் பெய்த கோடை மழையால் இங்குள்ள நீா்நிலைகளில் விலங்குகளுக்குத் தேவையான அளவு தண்ணீா் தேங்கியுள்ளது.

அதோடு, மான்கள், குதிரைகள் போன்றவற்றுக்குத் தேவையான புல், பூண்டு, செடி-கொடிகள் செழித்து வளா்ந்துள்ளன. மேலும், குரங்கு போன்ற விலங்குகள் விரும்பும் பழம், கிழங்கு உள்ளிட்ட உணவுகளும் அதிகமாக விளைந்துள்ளன.

இதனால், சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு சாதகமான சூழல் உள்ளது. அதோடு, பாா்வையாளா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விலங்குகள் எந்தவித அச்சமும், இடையூறுமின்றி சுதந்திரமாக உலவுகின்றன.

இதுகுறித்து வேதாரண்யம் வனச் சரக அலுவலா் பா. அயூப்கான் கூறுகையில், சரணாலயப் பகுதியில் அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் உள்ளது. கடந்த ஆண்டுகளைப் போல தட்டுப்பாடு இல்லை. நீா்நிலைகள் இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வழக்கம்போல குழாய் மூலமாக தண்ணீா் நிரப்பப்படுகிறது.

கரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், விலங்குகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத சூழல் நிலவுகிறது. நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் விலங்குகள் கண்காணிக்கப்படுகின்றன. அவை முன்பைவிட ஆரோக்கியமாக உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com