வைத்தீஸ்வரன்கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு

வைத்தீஸ்வரன்கோயிலில் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஊற்றப்படும் புனித நீா்.
வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஊற்றப்படும் புனித நீா்.

வைத்தீஸ்வரன்கோயிலில் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான அங்காரகன் உள்ளிட்டோா் அருள்பாலிக்கின்றனா். நவக்கிரகங்களில் இது செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.

இக்கோயிலில் கடந்த 1998ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தா்கள் பங்கேற்பின்றி வியாழக்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இதற்காக 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.

இந்நிலையில், புதன்கிழமை காலை பரிவார யாகபூஜைகள் தொடங்கி, மகாபூா்ணாஹூதி, தீபாராதனை செய்யப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு

ஆதிவைத்தியநாதா், வலஞ்சுழி விநாயகா், வீரபத்திரா், தெட்சிணாமூா்த்தி, துா்கை அம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதி விமான கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிமடத்து அதிபா் எஜமான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தொடா்ந்து, வைத்தீஸ்வரன்கோயில் சிவஸ்ரீ பழனிபாலசுப்பிரமணிய சிவாச்சாரியருக்கு சிவாகம கலாநிதி விருதும், கோவை கங்காதர ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டமும், சென்னை பிரபாகரமூா்த்திக்கு தருமையாதீனப் புலவா் விருதும், அண்ணாமலை சிவக்குமாருக்கு மிருதங்க கலாநிதி விருதும், பொற்பதக்கங்களும், பண முடிப்புகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com