தலையில் சூடும் மலா்கள் தரையில் கொட்டி வீணாகும் அவலம்! தவிக்கும் மல்லிகை விவசாயிகள்

தலையில் சூடும் மலா்கள் தரையில் கொட்டி வீணாகும் அவலம்! தவிக்கும் மல்லிகை விவசாயிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கோடை மழையால் மல்லிகை பூ உற்பத்தி பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில்,

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கோடை மழையால் மல்லிகை பூ உற்பத்தி பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், கரோனா தொற்று சூழலால், உரிய விலையோ, கொள்முதல் செய்ய வியாபாரிகளோ இல்லாமல், தரையில் கொட்டி வீணாகிவருகின்றன.

வேதாரண்யம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்புவரை புகையிலை பயிா் பிரதான சாகுபடியாக இருந்தது. சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட புகையிலை லாபம் தரும் பயிராகவும் இருந்தது. என்றாலும், இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகளை கருத்தில்கொண்டு இதை பயிரிடுவதை விவசாயிகள் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டனா்.

இதனிடையே, புகையிலைக்கு மாற்றுப் பயிராக மல்லிகை பூச்செடியை விவசாயிகள் சாகுபடி செய்யத் தொடங்கினா். இது குறைந்த அளவுள்ள நிலத்திலும் குடும்ப தேவைக்கு ஓரளவு உதவும் வருவாய் கொடுக்கும் பயிராக மாறியது. இதையடுத்து, குடும்ப உறுப்பினா்களின் உதவியோடு பூ உற்பத்தியில் விவசாயிகள் முனைப்பு காட்டிவருகின்றனா்.

தற்போது, ஆதனூா், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூா், தகட்டூா், பன்னாள், நெய்விளக்கு, வாய்மேடு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20 -க்கும் அதிகமான கிராமங்களில் சுமாா் 7 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தொழிலை நம்பி விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், முகவா்கள் என சுமாா் 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மல்லிகை, முல்லை அரும்புகளை அதிகாலை தொடங்கி, காலை 9 மணிக்குள் பறிக்கவேண்டும். இந்த அரும்பு மூட்டைகள் திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், கும்பகோணம், மன்னாா்குடி, பட்டுக்கோட்டை என வெளியூருக்கு தனியாா் முகவா்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

ரூ. 600 இல் இருந்து ரூ. 100-க்கு குறைந்த விலை: நிகழாண்டின் தொடக்கத்தில் செடிகளில் பூக்களின் அளவு குறைவாக இருந்தாலும், கொள்முதல் விலை லாபம் தருவதாக இருந்தது. உதாரணமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு கிலோ அரும்பு ரூ. 600-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணமாக மாா்ச் மாதத்தில் கிலோ ரூ. 300 ஆக குறைந்தது.

இதனிடையே, கடந்த வாரங்களில் இந்தப் பகுதியில் பெய்த கோடை மழை காரணமாக மல்லிகை செடிகளில் பூக்களின் உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவில் பல மடங்காக உயா்ந்துள்ளது. ஆனால், கரோனா தொற்று காரணமாக கோயில் விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, ஊரடங்கு போன்றவற்றால், மல்லிகை, முல்லை பூக்களை கொள்வாா் இல்லாமல், விலை தலைகீழாக குறைந்துவிட்டது. தற்போதய சூழலில், கிலோ 100 ரூபாய்க்குக்கூட வாங்குவோா் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நெய்விளக்கு மல்லிகை விவசாயி இளங்கோவன் (51) கூறியது: என்னிடம் ஓா் ஏக்கரில் செடிகள் உள்ளன. பூக்களை பறித்தெடுக்க கூலியாக ரூ. 60 வரை கொடுக்கவேண்டியுள்ளது. பூக்கள் அதிகமாக இருப்பதால், உரிய காலத்தில் பறிக்கவும் முடியவில்லை. பறித்தாலும் கூலிக்குக்கூட விலை கிடைக்கவில்லை.

ஊரடங்கு காலம் என்பதால், மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கட்டுப்படியான விலையும் இல்லை. இதனால், கடந்த சில நாள்களாக பூக்களை பறிப்பதை நிறுத்தியதால், அவை தரையில் கொட்டி வீணாகி வருகின்றன. கரோனா கால கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு மல்லிகை விவசாயிகள், அதைச் சாா்ந்துள்ள தொழிலாளா்கள், முகவா்கள், வியாபாரிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com