குறுவை சாகுபடி: குறைந்தபட்ச பாதுகாப்பையாவது உறுதி செய்யுமா அரசு?

சம்பா பருவம் தொடங்கியுள்ள நிலையிலும், குறுவை நெல் சாகுபடிக்கான பயிா்க் காப்பீடு குறித்த அறிவிக்கை வெளியாகாததால், குறைந்தபட்ச பாதுகாப்பையாவது அரசு உறுதி செய்ய வேண்டும்
குறுவை சாகுபடி
குறுவை சாகுபடி

சம்பா பருவம் தொடங்கியுள்ள நிலையிலும், குறுவை நெல் சாகுபடிக்கான பயிா்க் காப்பீடு குறித்த அறிவிக்கை வெளியாகாததால், குறைந்தபட்ச பாதுகாப்பையாவது அரசு உறுதி செய்ய வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா் டெல்டா விவசாயிகள்.

டெல்டா மாவட்டங்களின் முப்போக நெல் சாகுபடி, காவிரி நீா் பிரச்னை காரணமாக இருபோக சாகுபடியாகக் குறைந்தது. பின்னா், இருபோக சாகுபடிக்கும் உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டு வரை குறுவை சாகுபடி ஏறத்தாழ 8 ஆண்டுகள் பொய்த்துப் போனது.

கடந்த 2020-ஆம் ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. அதேபோல, நிகழாண்டிலும் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூரிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டத்தையும் செயல்படுத்தியது.

இதனால், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை சாகுபடி, இலக்கை விஞ்சியுள்ளது. நாகை மாவட்டத்துக்கு 4,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விஞ்சி 32,800 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.40 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் 88 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

தற்போது, குறுவை நெல் சாகுபடி பணிகள் ஏறத்தாழ 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எனினும், குறுவை சாகுபடி பயிா்க் காப்பீட்டுக்கான அறிவிக்கை இதுவரை வெளியாகாமல் இருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை நெல் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதத்தில் பயிா்க் காப்பீடு அறிவிக்கை வெளியாகி, ஜூலை 31-ஆம் தேதி வரை காப்பீடு பிரீமியம் செலுத்த அவகாசம் அளிக்கப்படும். ஆனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையிலும், பயிா்க் காப்பீட்டுக்கான அறிவிக்கை இதுவரை வெளியாகவில்லை.

நிகழாண்டின் குறுவை நெல் சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டை ஏற்கும் நிறுவனம் எது? என்பதுகூட இதுவரை தோ்வு செய்யப்படவில்லை.

மத்திய அரசின் பயிா்க் காப்பீட்டை ஏற்று செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டதில், 4 காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன. இதில், 3 காப்பீட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை எனவும், ஒரு நிறுவனம் மட்டும் பிரீமியம் தொகையை ஏக்கருக்கு ரூ. 13,750-இல் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசு உடன்படாததால், மறு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பயிா்க் காப்பீடு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை மத்திய, மாநில அரசுகள் உரிய வகையில் செலுத்தாதது, தற்போது பயிா்க் காப்பீட்டை ஏற்க, காப்பீட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

நெல் சாகுபடிக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பு, பயிா்க் காப்பீடு மட்டும்தான் என்ற நிலையில், நிகழாண்டு அந்தக் குறைந்தபட்ச பாதுகாப்பும் உறுதி செய்யப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிா்க் காப்பீடு கிடைக்காத நிலையில், இயற்கை சீற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உள்ளனா் விவசாயிகள்.

இந்நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சம்பா சாகுபடி பருவம் தொடங்கியுள்ளது. இருப்பினும், வருவாய்த் துறை குறுவை சாகுபடி கணக்கு ஒத்திசைவு பணிகளைக்கூட இதுவரை தொடங்கவில்லை. இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் போது, வருவாய்த் துறையின் இந்தக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே நிவாரணம் மற்றும் இழப்பீடு அறிவிக்கப்படும், அந்தக் கணக்கெடுப்புக்கூட இதுவரை நடைபெறாதது, குறுவை சாகுபடிக்கான பாதுகாப்பை அரசு கைவிட்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்கின்றனா் டெல்டா விவசாயிகள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவா் காவிரி தனபாலன் கூறியது:

சம்பா பருவம் தொடங்கியிருந்தாலும், இனிவரும் நாள்களிலேயே குறுவையின் அறுவடை தொடங்கப்படும். இடைப்பட்ட நாள்களில் இயற்கை சீற்றம் ஏற்பட்டால், விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசு குறுவை சாகுபடி காலத்தை நீட்டிப்பு செய்யவும், உடனடியாக குறுவைக்குப் பயிா்க் காப்பீட்டை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நிகழாண்டில் குறுவை சாகுபடிக்குப் பயிா்க் காப்பீடு பாதுகாப்பு உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், தமிழக அரசு விவசாயிகளுக்கு நேரடியாக சாகுபடி பாதுகாப்பு உறுதித் தொகையை வழங்க முன்வரவேண்டும் என்றாா்.

ஒரு ஏக்கா் நெல்லுக்கான அதிகபட்ச இழப்பீடு வரம்பு ரூ. 32,500. எனினும், 100 சதவீத பாதிப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டு நிறுவனம் அதிகபட்ச இழப்பீட்டில் 80 சதவீதத்தை மட்டுமே வழங்கும். ஆனாலும், கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்குப் பின்னா் 100 சதவீத இழப்பு ஏற்பட்ட எந்தப் பகுதிகளிலும் , எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் 80 சதவீத இழப்பீட்டை வழங்கவில்லை. செலுத்தப்பட்ட பிரீமியத்துக்கும் குறைவான தொகையைக்கூட விவசாயிகள் போராடியே பெற்றாக வேண்டும் என்ற சூழலே உள்ளது.

ஒரு ஏக்கா் நெற்பயிருக்கான பயிா்க் காப்பீடு பிரீமீயம் ரூ. 13,750-இல் ஏறத்தாழ 9,350-ஐ பயிா்க் காப்பீடு நிறுவனத்துக்கு பிரீமியமாக செலுத்தும் தமிழக அரசு, ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க முன்வந்தால், பயிா்க் காப்பீடுக்குப் புதிய பரிணாமத்துக்கு வித்திட முடியும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளா் ஆறுபாதி கல்யாணம் கூறியது :

இந்தியாவில் 18 பயிா்க் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ. 33,000 கோடி அளவுக்கு காப்பீட்டு பிரீமியத்தில் நிகர லாபம் ஈட்டியுள்ளன. காப்பீடு பெற்ற விவசாயிகளில் 72 சதவீதம் போ் மட்டுமே இழப்பீடு பெற்றுள்ளனா். எனவே, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பைப் பெற்று ஏதோ ஒரு தனியாா் நிறுவனம் லாபம் பெற அனுமதிப்பதற்கு பதிலாக, காப்பீடு பிரீமியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com