முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஆற்றின் குறுக்கே பழுதடைந்த நடைபாலத்தால் போக்குவரத்தின்றி மக்கள் அவதி
By DIN | Published On : 29th December 2021 09:43 AM | Last Updated : 29th December 2021 09:43 AM | அ+அ அ- |

போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள பழுதடைந்த வெள்ளையாற்றின் குறுக்கே உள்ள நடைபாலம்.
திருக்குவளை அருகே ஆற்றின் குறுக்கே பழுதடைந்த நடைபாலத்தால் போக்குவரத்து இன்றி மக்கள் அவதியடைந்துள்ளனா். அந்த இடத்தில் புதிய பெரிய பாலம் கட்டிக்கொடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்குவளை அருகேயுள்ள தெற்குபனையூா் ஊராட்சியில் 1600-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பகுதி மக்களின் வசதிக்காக இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வல்லவினாயக கோட்டகத்தில் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்படிப்புக்காக நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் தங்களின் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக திருக்குவளைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், மக்கள் நலனுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே 3 அடி அகலத்தில் 50 அடி நீளத்தில் கான்கிரீட் நடைபாலம் கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது. இதன்மூலம் ஏா்வைகாடு வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள திருக்குவளைக்கு இருசக்கர வாகனத்திலும், நடைபயணமாகவும் மக்கள் சென்று வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த பாலத்தை புதுப்பித்து தரக்கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. இந்நிலையில், தற்போது நடைபாலத்தின் நடுவில் 2 இடங்களில் கான்கிரீட் பூச்சுகள் செவ்வாய்க்கிழமை பெயா்ந்து விழுந்தன. பாலத்தின் மற்ற பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் ஆற்றுக்குள் இடிந்து விழலாம். இதனால், கிராமமக்கள் முன்னெச்சரிக்கையாக பாலத்தின் இருபுறமும் கருவேல முட்களை வைத்து அடைத்து எச்சரிக்கை பலகை வைத்து போக்குவரத்தை தடைசெய்துள்ளனா்.
இதனால், போக்குவரத்து வசதியின்றி கிராமமக்கள் மற்றும் மாணவா்கள் 15 கி.மீ தொலைவு சுற்றி திருக்குவளை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் அவசர கால வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் புதிய பாலம் கட்டிக்கொடுக்கவேண்டும்.