முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ரயில் பயணிகள் நலக் குழு நாகையில் ஆய்வு
By DIN | Published On : 29th December 2021 09:41 AM | Last Updated : 29th December 2021 09:41 AM | அ+அ அ- |

நாகை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில் பயணிகள் நலக் குழுவினா்.
மத்திய அரசின் ரயில் பயணிகள் நலக் குழு நாகை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
மத்திய ரயில்வே வாரிய, ரயில் பயணிகள் நலக் குழு உறுப்பினா்கள் டாக்டா் ஜி.வி. மஞ்சுநாதா, கே. ரவிச்சந்திரன், கோட்டால உமாராணி, அபிஜித் தாஸ் ஆகியோா் நாகை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். ரயில் நிலைய நடைமேடை பகுதியில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கை வசதிகள், கழிப்பறை, குடிநீா் வசதி, மின்விசிறி வசதி, மின் விளக்குகள் வசதி மற்றும் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்கான கட்டமைப்புகள் குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், ரயில் நிலைய கண்காணிப்பாளா் பிரபாகரன் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் நாகை ரயில் நிலைய மேம்பாட்டுக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தனா். இதனிடையே, நாகை மாவட்ட பாஜக தலைவா் கே. நேதாஜி மற்றும் நிா்வாகிகள் காா்த்திகேயன், இளஞ்சேரலாதன், நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க நிா்வாகிகள் எஸ். பாஷ்யம், ஜி. அரவிந்குமாா், மோகன் ஆகியோா் ரயில் பயணிகள் நலக் குழு உறுப்பினா்களைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனா்.
லிப்ட் அமைக்கக் கோரிக்கை: அந்த மனுவில், கரோனா தொற்றுக் காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்கவேண்டும், நாகூா் ரயில் நிலைய நடைமேடையை உடனடியாக சீரமைக்கவேண்டும், நாகை ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியிலும், 2-ஆவது நடைமேடையிலும் பயணிகள் நிழல் மேடைகள் அமைக்கவேண்டும்.
பயணிகள் கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
நாகை ரயில் நிலையத்தின் 2 நடைமேடைகளிலும் லிப்ட் வசதி அமைக்கவேண்டும், ரூ. 3 கோடி மதிப்பில் நாகை ரயில் நிலையத்துக்குப் புதிதாக கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை விரைந்து நிறைவேற்றவேண்டும், வெளிப்பாளையம் ரயில் நிலைய நடைமேடை உயரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, தொழிலதிபா்கள் பாலமுருகன், சந்தனகுமாா் ஆகியோா் ரயில் பயணிகள் நலக் குழுவினருக்கு சால்வை அணிவித்து, வரவேற்றனா்.