முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகூர் தர்கா கந்தூரி விழா: தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
By DIN | Published On : 31st December 2021 09:03 PM | Last Updated : 31st December 2021 09:03 PM | அ+அ அ- |

மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த நாகூர் தர்காவின் அலங்கார வாசல்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே கந்தூரி விழா நாள்களில், நாகூர் தர்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
உலக புகழ் பெற்ற தர்காக்களுள் ஒன்றாகவும், மத நல்லிணக்கம் போற்றும் வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது நாகூர் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவின் 465-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் ஜனவரி 13-ஆம் தேதி இரவும், நாகூர் ஆண்டவர் தர்காவின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசம் நிகழ்ச்சி ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தவரும் திரளாகப் பங்கேற்பது வழக்கம். கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலில் உள்ள நிலையில் கந்தூரி விழா நடைபெறுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றம் நடைபெறும்.
ஜனவரி 4-ஆம் தேதி, கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெறும். ஜனவரி 13, சந்தனம் பூசும் விழா நடைபெறும். ஜனவரி 14 ஆகிய தேதிகளில் தர்காவுக்குள் செல்ல அனுமதி சீட்டும், கரோனா தடுப்பூசி சான்றிதழும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தர்கா நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் அனுமதி சீட்டுடன், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழும் வைத்திருப்பவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிக்க- பெண் சிசு கொலை: பேரையூர் அருகே பெற்றோர் கைது
கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்று மற்றும் ஒமைக்கரான் தொற்றுப் பரவலில் உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நாகூர் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கந்தூரி விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், விழா தொடர்பாக ஏதேனும் புகார்களைத் தெரிவிக்க வேண்டுமெனில் 84386 69800, 04365- 251992 ஆகிய தொலைத் தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது 1077 என்ற எண்ணில் கட்டணமில்லா தொலைபேசி சேவையில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.