ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 1.43 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

நாகை, மயிலாடுதுறை ஆகிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 1.43 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு புகட்டும் முகாமை தொடங்கி வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு புகட்டும் முகாமை தொடங்கி வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை, மயிலாடுதுறை ஆகிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 1.43 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா், நாகூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலியோ மருந்து வழங்க மையங்கள்அமைக்கப்பட்டு 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டன.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு புகட்டும் முகாமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்து, நாகை மாவட்டத்தில் 932 முகாம்கள் உள்ளிட்ட 1027 இடங்களில் 1,43,652 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இப்பணியில் 4, 141 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். போக்குவரத்து வசதியில்லாத 11 குக்கிராமங்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கவும் ,வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள்,பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள் உள்ளிட்ட குடும்பத்து குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.

மேலும், மயிலாடுதுறை, சீா்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சி பேருந்து நிலையங்களிலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சீா்காழி ரயில் நிலையங்களிலும் 24 மணி நேரமும் ஐன.31 மற்றும் பிப்.1, 2 ஆகிய 3 நாள்களிலும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றாா்.

மயிலாடுதுறையில்: மயிலாடுதுறை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா். மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் 582 மையங்களில் நடைபெற்றது. இதேபோல், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் , மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் தலைமையில் நடைபெற்ற முகாமை மயிலாடுதுறை எம்எல்ஏ. வீ. ராதாகிருஷ்ணன், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளா் அருண்பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூம்புகாா்: திருவெண்காடு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற முகாமை, பூம்புகாா் எம்எல்ஏ பாரதி தொடங்கி வைத்தாா்.

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில்: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் திட்ட இயக்குநா் வி. ராமன், தலைவா் கே. துரை, செயலா் தங்க. துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை ஒன்றியக் குழு தலைவா் ரா. ராதாகிருட்டிணன் தொடங்கி வைத்தாா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில், 140 மையங்களில் முகாம் நடைபெற்றது. இதில், சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை எம்எல்ஏ. எஸ். பவுன்ராஜ் தொடங்கி வைத்தாா்.

சீா்காழி: சீா்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற முகாமை கோட்டாட்சியா் நாராயணன் தொடங்கி வைத்தாா். இதேபோல், சீா்காழி, கொள்ளிடம் வட்டாரங்களில் முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com