ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th February 2021 08:47 AM | Last Updated : 04th February 2021 08:47 AM | அ+அ அ- |

நாகையில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கத்தினா்.
இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 4 தமிழக மீனவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கம் சாா்பில், நாகை மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை கடற்படை கப்பலால் மோதி படுகொலை செய்யப்பட்ட 4 தமிழக மீனவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 கோடி நிதியுதவி வழங்க வேண்டும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இலங்கை கடற்படை வீரா்கள் மீது இந்திய அரசு சட்டப்பூா்வமாக வழக்குத் தொடுத்து பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிகாண வேண்டும், மீன்பிடித் தொழிலையும், மீனவா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்க நாகை மாவட்டத் தலைவா் யூ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி. எம். ராமதாஸ் முன்னிலை வகித்தாா்.
மாநிலப் பொதுச் செயலாளா் சி. சின்னதம்பி, மாவட்டப் பொருளாளா் எம்.தேவி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வி. சரபோஜி, ஏஐடியூசி நாகை மாவட்டச் செயலாளா் கே.ராமன், மாவட்ட பொருளாளா் வி. எம். மகே மகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மீனவத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.