நாகை-நன்னிலம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மரம்
By DIN | Published On : 04th February 2021 08:45 AM | Last Updated : 04th February 2021 08:45 AM | அ+அ அ- |

நாகை-நன்னிலம் பிரதான சாலையில் தொடா் விபத்துக்களை ஏற்படுத்தும் மரத்தை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி அருகே மரைக்கான்சாவடியில் நாகை-நன்னிலம் பிரதான சாலையோரம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரம் உள்ளது. இந்த மரம் கஜா புயலின்போது சாலைப் பகுதியை நோக்கி சற்று சாய்ந்துள்ளது.
இந்த சாலை வழியாக கும்பகோணம், திருவாரூா், மயிலாடுதுறை, மதுரை, வேலூருக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள மரத்திற்கு அருகே இருவாகனங்கள் கடந்து செல்லும்போது மரத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
மரம் உள்ள இடத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இந்த மரத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
இதுகுறித்து திமுக பேரூா் கழகப் பொறுப்பாளா் எம். முகம்மது சுல்தான் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மரத்தை வெட்டி அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.