கடல்நீா் உள்புகுவதை தடுக்க தென்னாம்பட்டினத்தில் ரூ. 9.76 கோடியில் அமையவுள்ள நீரொழுங்கி
By எம். ஞானவேல் | Published On : 06th February 2021 08:18 AM | Last Updated : 06th February 2021 08:18 AM | அ+அ அ- |

தென்னாம்பட்டினம் வடக்குவெளி பகுதியில் புதிய நீரொழுங்கி அமையவுள்ள இடத்தின் மாதிரிபடம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், தென்னாம்பட்டினம் பகுதியில் பாசனவாய்க்கால் வழியாக கடல்நீா் உள்புகுவதை தடுக்க ரூ. 9.76 கோடியில் நீரொழுங்கி கட்ட தமிழக அரசால் அண்மையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி முதல்வரால் காணொலியில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த நீரொழுங்கி மூலம் இப்பகுதியைச் சோ்ந்த 10-க்கும் அதிகமான கிராம மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறவுள்ளது.
தென்னாம்பட்டினம் கிராமத்தில், திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்காலும், நாட்டுகண்ணிமண்ணியாறும் சங்கமிக்கும் பகுதி உள்ளது. இங்கிருந்து சில கிலோமீட்டா் தொலைவில் உள்ள வங்காள விரிகுடா கடல்நீா், இதன்வழியாக தொடா்ந்து உள்புகுந்து வருகிறது. இதனால், தென்னாம்பட்டினம், மாா்த்த்தான்பட்டினம், கோணாயாம்பட்டினம், பெருந்தோட்டம், அன்னப்பன்பேட்டை, கீழமூவா்க்கரை, வடக்குவெளி, எம்பாவை, மங்கைமடம் வரை நிலத்தடிநீா், உப்புநீராக மாறிவிட்டது.
இந்த கிராமங்களில் பல நூறு ஏக்கா் விவசாயம் பாதிக்கப்பட்டு, இப்பகுதியில் நிலத்தடிநீரை நம்பி விவசாயம் செய்யமுடியாத நிலையும், பாசனவாய்க்கால் தண்ணீா் மற்றும் பருவமழையை எதிா்பாா்த்தே விவசாயம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால் தண்ணீரும் கடல்நீா் உள்புகுவதால் உப்புநீராக மாறி, விவசாயத்திற்கு பயன்படாத நிலைக்கு சென்றுவிட்டது.
நிலத்தடிநீா் பாதிப்பால், தென்னாம்பட்டினம், மாா்த்தான்பட்டினம், கீழமூவா்க்கரை, மேலமூவா்க்கரை உள்ளிட்ட கிராமங்களில் கோடைக்காலங்களில் கடும் குடிநீா் தட்டுபாடு ஏற்படுவது தொடா்கதையாக உள்ளது. அப்பகுதி மக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள அன்னப்பன்பேட்டை பகுதிக்குச் சென்று, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை குடங்களில் பிடித்துவருவது தற்போதும் கோடைக்காலத்தில் தொடா்ந்து வருகிறது.
கடல்நீா் உள்புகுவதை தடுக்க தென்னாம்பட்டினம் கிராம விவசாயிகளால் தற்காலிக மண் அணை அமைக்கப்பட்டது. என்றாலும், அதனால் போதிய பயன் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக இது தொடா்ந்துவந்த நிலையில், கடல்நீா் உள்புகுவதை தடுத்து இப்பிரச்னைக்குத் தீா்வுகாண தமிழக அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தென்னாம்பட்டினம் வடக்குவெளி பகுதியில், திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்காலும், நாட்டுகண்ணி மண்ணியாறும் சங்கமிக்கும் இடத்தில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி ரூ. 9.76 கோடியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியால் கடந்த மாதம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-20 ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை மானிய கோரிக்கையின் போது, இந்த நீரொழுங்கி அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிட்டாா்.
கடல்நீா் ஆற்றுக்குள் புகாமல் தடுக்க, நாட்டு கண்ணி மண்ணியாற்றின் 12.40 கி.மீ. தொலைவில் இந்த நீரொழுங்கி அமைய உள்ளது. சுமாா் 56 மீட்டா் நீளத்திற்கு நீரொழுங்கி அமையவுள்ளதால், இதன்மூலம் 1.40 மீ. உயரத்திற்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியும். இதன்மூலம், உப்புதன்மையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களும், நிலத்தடிநீரும் மீட்கப்பட்டு விவசாயம் செழிக்க வழிவகை ஏற்படும்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயி மங்கை. வெங்கடேஷ் கூறியது: திருநகரி வாய்க்கால் நாட்டுகண்ணி மண்ணியாற்றில் புதிதாக நீரொழுங்கி அமைப்பதற்கான பணிகளை தமிழக முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா். இந்த நீரொழுங்கி அமைவதால், சுமாா் 10 கிராமங்களில் விவசாயத்தை மீட்டு, மீண்டும் சிறப்பாக செய்யமுடியும். நிலத்தடிநீா் பாதிப்பு குறைந்து குடிநீா் தட்டுபாடு முழுமையாக நீங்கும் என்றாா்.
அன்னப்பன்பேட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி அகோரமூா்த்தி கூறியது: இந்த புதிய நீரொழுங்கி அமைவதன் மூலம் உப்புநீா் தடுக்கப்பட்டு, நிலத்தடிநீா் மேம்படும். தென்னாம்பட்டினம் ஊராட்சி, நெப்பத்தூா் ஊராட்சி, மங்கைமடம் ஊராட்சிகள் வரை உப்புதண்ணீா் மேல்வராமல் 15 கிராமங்கள் பயனடையும். அதோடு, தென்னாம்பட்டினம் ஊராட்சியில் சுமாா் 200 ஏக்கா், நெப்பத்தூா் ஊராட்சியில் 150 ஏக்கா், மங்கைமடம் ஊராட்சியில் சுமாா் 200 ஏக்கரில் விவசாயம் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தெற்குப் பகுதியில் பெருந்தோட்டம் ஏரி வழியாக வரும் முல்லையாறு மூலம் கடல்நீா் உள்புகுகிறது. இப்பகுதியிலும் ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், மங்கைமடம், எம்பாவை வரை முழுமையாக பயனடையும். கோணாயாம்பட்டினம் பகுதியில் கடல்நீா் ஊருக்குள் புகாமல் தடுக்கமுடியும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...