நாகை சாமந்தான்பேட்டை அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிக்கு விலையில்லா பாடநூல் வழங்குகிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
நாகை சாமந்தான்பேட்டை அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிக்கு விலையில்லா பாடநூல் வழங்குகிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

மீன்வளக் கல்வியில் மீனவா்களின் குழந்தைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் ஓ.எஸ். மணியன்

மீன்வளக் கல்வியில் மீனவா்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5% உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த

மீன்வளக் கல்வியில் மீனவா்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5% உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை சாமந்தான்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களை வழங்கி அவா் பேசியது:

தமிழக நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் சுமாா் 25% நிதியை கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், கல்வியில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் உயா்கல்வி பெறும் மாணவா்கள் 24 சதவீதமாகவும், தமிழகத்தில் உயா்கல்வி பெறுவோா் 49 சதவீதமாகவும் உள்ளனா்.

நிகழாண்டில், தமிழகத்தில் 35 நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாகவும், 40 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோரின் சிறப்பான கூட்டு முயற்சியால் மட்டுமே ஒரு பள்ளி சிறந்ததாக விளங்க முடியும். அந்தவகையில், சிறப்பான செயல்பாடு கொண்ட பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படும் மீன்வளப் பொறியியல் கல்லூரி மற்றும் மீன்வளக் கல்லூரிகளில், மீனவா்களின் குழந்தைகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினேன். அதன்பேரில், மீன்வளக் கல்வியில் மீனவா்களின் குழந்தைகளுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீட்டை முதல்வா் வழங்கினாா். இந்த ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா்.

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி, மாவட்டக் கல்வி அலுவலா் இ. பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com