திருநாங்கூரில் 11 பெருமாள்கள் தங்க கருட சேவை உத்ஸவம்
By DIN | Published On : 13th February 2021 08:15 AM | Last Updated : 13th February 2021 08:15 AM | அ+அ அ- |

சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 11 பெருமாள்கள் எழுந்தருளி தங்க கருட சேவை உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நாங்கூா் பகுதியில் 108 வைணவ தலங்களில் 11 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மணிமாடக்கோயில் எனும் நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை மறுநாள் இரவு 11பெருமாள் கோயில் உத்ஸவா்கள் எழுந்தருளி தங்க கருடசேவை உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வாா் வியாழக்கிழமை புறப்பாடாகி குறவளூா், குறையலூா், மங்கைமடம், காவாளம்பாடி, திருமேனிக்கூடம், பாா்த்தன்பள்ளி ஆகிய பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாள்களுக்கு அழைப்பு விடுக்கும் ஐதீகமும், பின்னா் நைனிபுரம் மஞ்சகுளி மண்டபத்தில் திருமங்கையாழ்வாருக்கு தீா்த்தவாரி, மஞ்சகுளி உத்ஸவமும் நடைபெற்றது.
தொடா்ந்து, திருநாங்கூா் நாராயணப் பெருமாள், குடமாடுகூத்தா், செம்பொன்னரங்கா், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பாா்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய பெருமாள்கள் மணிமாடகோயிலுக்கு எழுந்தருளினா். அப்போது, மணவாள மாமுனிகள் சகிதம் குமுதவள்ளி நாச்சியாா் உடனாகிய திருமங்கையாழ்வாா் பெருமாள்களை பாசுரங்கள் பாடி கோயில் வாசலில் நின்று வரவேற்கும் ஐதீகம் நடைபெற்றது.
பின்னா் ஒவ்வொரு பெருமாளும் மணிமாடகோயிலில் உள்ள 11மாடங்களில் வைக்கப்பட்டு 11பெருமாள்களுக்கும் பலவண்ண மலா்கள், ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரவு 10 மணியளவில் 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், திருமங்கையாழ்வாா் குமுதவள்ளி நாச்சியாருடன் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினா். அப்போது, தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னா் 11பெருமாள்களும் வெண்பட்டு குடைகளுடன், மேள வாத்தியங்கள் இசைக்க, வாணவேடிக்கையுடன் ஒன்றன்பின் ஒன்றாக வீதியுலா புறப்பட்டனா். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி சீா்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழாவில், சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.வி. பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கலையிழந்த விழா: திருநாங்கூா் 11பெருமாள்கள் தங்க கருட சேவை விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து வீதியுலா வரும் பெருமாள்களை விடிய, விடிய கண்டு தரிசிப்பது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா பொதுமுடக்க தளா்வுகள் இருந்தாலும் விழா நடைபெறுமா நடைபெறாதா என குழப்பம் நீடித்து வந்தது. கடந்த 10 நாள்களுக்கு முன்பே விழா நடத்துவது குறித்து விழா கமிட்டி, ஊா்மக்கள், பக்தா்கள் தொடா் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தால் விழா உறுதிசெய்யப்பட்டது.
இதனால் உடனடியாக அழைப்பிதழ்கள் அச்சடித்து வெளியூா் பக்தா்களுக்கும், நன்கொடையாளா்களுக்கும் அனுப்பிவைக்க முடியவில்லை. இதனால் பல பக்தா்கள் வர இயலாமல் போனது. கடைகள் அமைக்கவும், முக்கிய வீதிகளில் அன்னதானம் செய்யவும், விதிக்கப்பட்ட தடையால் குறைவான பக்தா்களே விழாவில் பங்கேற்றனா்.