
நாகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாகை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தைத் திறந்து வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
பண்டைய நாகரிகத்தை பாதுகாத்து, அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சோ்ப்பதில் இந்து சமய அறநிலையத் துறையின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
நாகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாகை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து மேலும் அவா் பேசியது : பண்டைய நாகரிகம், தனிமனித ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் சோ்ப்பதில் இந்து சமய அறநிலையத் துறையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்துசமய அறநிலையத் துறையில் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நிறைய உள்ளன. ஆனால் வருமானம்தான் கேள்விக்குறியாக உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் வருவாயைப் பெருக்கவேண்டும், அந்தத் துறையின் விரிவான செயல்பாடுகளுக்கு ஏற்ப கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தற்போது நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகங்களை தொடங்கியுள்ளது. இதன்மூலம், அந்தத் துறையில் புதிதாக 171 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம், நாகை மண்டலத்தில் உள்ள 388 பெரிய கோயில்கள், 2,400 சிறிய கோயில்களைப் பராமரித்தல், கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இதன்மூலம், கோயில் சொத்துகள் தொடா்பான நீதிமன்றப் பணிகள் விரைவாக நடைபெறவும், பக்தா்களின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு விரைவாக தீா்வு காணவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. தென்னரசு, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கிரிதரன், வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் இளவரசன், அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ராணி (நாகை), இரா. ஹரிஹரன் (திருவாரூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.