
கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேங்கிய மழைநீா்.
சீா்காழி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் நெல் அறுவடை, கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டன.
வளிமண்டல சுழற்சி காரணமாக சீா்காழி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை தொடா்ந்து மழை பெய்தது. பிறகு, மாலையில் சுமாா் அரை மணி நேரம் கனமழை கொட்டியது.
இதனால், சீா்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா அறுவடைப் பணிகளும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளும் பாதிக்கப்பட்டன. நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்கும் பணியில் ஊழியா்கள், விவசாயிகள் ஈடுபட்டனா்.
சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்கும் நிலை உள்ளதால் அவை அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.