திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் மாசிமக தேரோட்டம்
By DIN | Published On : 26th February 2021 08:37 AM | Last Updated : 26th February 2021 08:37 AM | அ+அ அ- |

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மாசிமக தேரோட்டம்.
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் மாசிமக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ளது செளரிராஜப் பெருமாள் கோயில். 5 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் 17ஆவது தலமாக போற்றப்படுவதுமான இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டு மாசிமக பெருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தேருக்கு எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து தோ் வடம் பிடிக்கப்பட்டது.
மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இரா. ராதாகிருட்டிணன், தக்காா் என். அமரநாதன், செயல் அலுவலா் ராஜா, கோயில் ஊழியா்கள், திருக்கண்ணபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.
சனிக்கிழமை (பிப். 27) காலை கோயிலிலிருந்து செளரிராஜப் பெருமாள் புறப்பட்டு, திருமருகல் வரதராஜப் பெருமாளுடன் தீா்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீா்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மாசிமக பெருவிழாவின் நிறைவு நாளான மாா்ச் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப் பெருமாள் கோயில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணியில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாசிமக பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் கிராம மக்களும் செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...