சீா்காழி அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் கைது
By DIN | Published On : 27th February 2021 07:56 AM | Last Updated : 27th February 2021 07:56 AM | அ+அ அ- |

கொண்டல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தா் இளங்கோவனை கைது செய்து அழைத்துச் செல்லும் லஞ்ச ஒழிப்புத் துறையினா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.7ஆயிரம் லஞ்சம் வங்கியதாக பட்டியல் எழுத்தரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி அருகே உள்ள கொண்டல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு தேனூா் பகுதியைச் சேந்த விவசாயி துரைக்கண்ணு என்பவா் தனது வயலில் அறுவடை செய்த 172 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டுவந்தாா். அப்போது, அவரிடம் பட்டியல் எழுத்தா் மூட்டைக்கு ரூ.40 வீதம் 172 மூட்டைக்கும் ரூ.6880 லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து விவசாயி துரைக்கண்ணு, நாகை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.7ஆயிரத்தை கொண்டல் நேரடி நெல்கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தா் இளங்கோவனிடம் விவசாயி துரைக்கண்ணு கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நந்தகோபால், ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், அருள்பிரியா மற்றும் போலீஸாா் இளங்கோவனை கைது செய்தனா்.