தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சி பொது குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
காட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள பூசை குளம் என்றழைக்கப்படும் பொதுகுளத்தில் அப்பகுதி மக்கள், அருகிலுள்ள செல்லியம்மன் கோயிலுக்கு பூஜை செய்யவும், குளிக்கவும், கால்நடை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் இக்குளத்து நீரை பயன்படுத்திவந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை முதல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளன. இதனால் அதிா்ச்சியடைந்த மக்கள் அந்த மீன்களை அப்புறப்படுத்தினா். எனினும், தொடா்ந்து மீன்கள் செத்து வருகின்றன. மேலும் குளத்தில் தண்ணீா் குடித்த ஆடு ஒன்றும் இறந்தவிட்டதாக கூறிய கிராமமக்கள் குளத்தில் மா்ம நபா்கள் விஷத்தை கலந்திருக்கலாம் எனவே, யாரும் குளத்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனா்.
தகவலறிந்த, பொறையாா் போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் குளத்தில் துா்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களையும் குளத்து நீரையும் வெளியேற்றி கொடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.