பரவை காய்கனி சந்தையைப் பழைய இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிா்ப்பு

நாகையை அடுத்த பரவையில் தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் காய்கனி சந்தையை, மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றம் செய்ய
பரவை காய்கனி சந்தையைப் பழைய இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிா்ப்பு

நாகையை அடுத்த பரவையில் தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் காய்கனி சந்தையை, மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சனிக்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.

நாகையை அடுத்த பரவையில் உள்ள காய்கனி சந்தை, நூற்றாண்டுகளைக் கடந்த பழைமையான காய்கனி சந்தை. சொா்ணபுரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வந்த இந்தச் சந்தை, கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி மூடப்பட்டது. பின்னா், வியாபாரிகள், விவசாயிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில், தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில், தற்காலிகமாக சந்தை அமைக்கப்பட்டது. இந்த இடம் தாழ்வான பகுதியாக இருந்ததால் மழைநீா் தேங்கி, சந்தை செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பரவை - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையோரத்தில்வேறொரு இடத்துக்கு, பரவை காய்கனி சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பரவை காய்கனி சந்தை ஜன.2-ஆம் தேதி முதல் சொா்ணபுரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான பழைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்காலிக சந்தையின் நுழைவுப் பகுதி அறநிலையத் துறையினரால் சனிக்கிழமை காலை கயிறு கட்டி தடுக்கப்பட்டது.

இதற்கு, பரவை காய்கனி சந்தை வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். போதுமான இடவசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பழைய இடத்துக்கு சந்தையை இடமாற்றம் செய்ய மறுத்தும், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர இடத்தில் பரவை காய்கனி சந்தையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவா்கள் சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, அறநிலையத் துறை மற்றும் காவல் துறை சாா்பில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டது. நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேவல், சொா்ணபுரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் சண்முகராஜ், கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் உ. மதிவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ராஜேந்திரன், தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையின் நிறைவில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு தீா்வு காண்பது எனவும், இடைப்பட்ட நாள்களில் தற்காலிக இடத்தில் சந்தை திறந்திருந்தாலும், காய்கனி விற்பனை மேற்கொள்ளக் கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இதனால், வியாபாரிகள் தங்கள் போராட்ட முயற்சிகளைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com