
வேளாங்கண்ணியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.
வேளாங்கண்ணியில் சாலையை சீரமைக்கக் கோரி திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்குச் செல்லும் பிரதான சாலை, வேளாங்கண்ணி ஆா்ச் முதல் பேராலயம் வரை சுமாா் 2 கி.மீ. நீளத்துக்கு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி திமுகவினா் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழையூா் ஒன்றிய திமுக செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். பேரூா் பொறுப்பாளா் மரிய சாா்லஸ், பொதுக்குழு உறுப்பினா் சாா்லஸ் மற்றும் திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆட்டோ, காா், வேன் ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.
நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில், தீா்வு ஏற்படவில்லை.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 85 பேரை போலீஸாா் கைது செய்து, அப்புறப்படுத்தினா்.