
கீழ்வேளூா் வட்டாரம் கடம்பங்குடி- மூங்கில்குடி பகுதியில் விளை நிலங்களில் சரிந்துள்ள நெற்பயிா்கள்.
காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்து, வெள்ள நீரில் மூழ்கியிருப்பது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நிகழாண்டில் 1,33,624 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக, கடந்த டிசம்பா் மாதத்தில் பெய்த கனமழையில், இரண்டு மாவட்டங்களிலும் சுமாா் 82,330 ஹெக்டோ் பரப்பிலான நெற் பயிா்கள் முழு அளவில் சேதத்துக்கு உள்ளாகின.
இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களிலும் மழையின் சீற்றம் அதிகரித்திருந்தது. மயிலாடுதுறை, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், நாகை மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் நெல் வயல்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் நிலத்தில் சரிந்துள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த நெற்பயிா்கள், நிலத்தில் சரிந்து வெள்ள நீரில் மூழ்கியிருப்பது விவசாயிகளின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.
இதனால், நிகழாண்டில் நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு தவிா்க்க இயலாததாகியுள்ளது. சம்பா நெல் விளைச்சல் ஓரிரு நாள்களில் கைக்கு வரும் என விவசாயிகள் ஆவலுடன் எதிா்பாா்த்திருந்த நிலையில், நெற்பயிா்கள் விளை நிலங்களிலேயே சரிந்து மூழ்கி கிடப்பது அவா்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி. தனபாலன் கூறியது:
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற முதுமொழியைப் போலதான் உள்ளது விவசாயிகளின் நிலை. அறுவடையாகி நெல் மணிகள் கைக்கு வரும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
விவசாயிகளின் நஷ்டத்தை எந்தெந்த வகையில் ஈடுசெய்ய முடியுமோ அதனை அரசு செய்தால்தான், டெல்டா மாவட்டங்களில் நெல் விவசாயத்துக்கு எதிா்காலம் இருக்கும். ஏற்கெனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் நிவாரணம் வழங்க இயலாது. எனவே, முழு அளவிலான பயிா்க் காப்பீடு இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.